விழுப்புரம் அருகே சிறுவன் கொல்லப்பட்டதும் சிறுமி பலாத்காரப்படுத்தப்பட்ட கொடூர சம்பவத்துக்கு சாதிவெறி காரணமல்ல என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த வெள்ளம்புதூர் கிராமத்தில் ஆராயி என்ற பெண்ணின் குடும்பத்தினர் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. ஆராயியின் 8 வயது மகன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 14 வயது மகள் மிகக் கொடூரமான பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப் பட்டிருக்கிறார். தாய் ஆராயியும் தாக்கப்பட்டார்.
ஆராயியும், அவரது மகள் ஆகிய இருவரும் நினைவற்ற நிலையில் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஆராயி குடும்பத்தினர் மீது சாதி வெறி காரணமாக சிலர் தாக்குதல் நடத்தியதாக சில அமைப்புகள் தெரிவிக்க ஆரம்பித்தன. சமூகவலைதளங்களிலும் இவ்வாறு பலர் பதிவிட்டனர்.
ஆனால் காவல்துறை விசாரணையில் வேறுவிதமான தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது ஆராயி குடும்பத்தினரைப் போலவே இதற்கு முன்பு வேறு சமூகத்தைச் சேர்ந்த இரு குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மூன்று சம்பவங்களிலும் ஒரே மாதிரி தாக்குதல்கள் பலாத்காரம் நடந்திருக்கின்றன. மூன்று குடும்பங்களுமே ஊரைவிட்டு ஒதுங்கி இருப்பதோடு, குற்றவாளிகள் தப்பிச்செல்ல ஏதுவான பகுதியாக இருக்கின்றன.
ஆகவே பலாத்காரப்படுத்தும் நோக்குடன் இந்தத் தாக்கதல் நடந்திருக்கலாம் என்று காவல்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.
மேலும், அப்பகுதியில் சாலைப்பணிகளில் ஈடுபட்டுவரும் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உட்பட பலரையும் சந்தேக வளையத்துக்குள் கொண்டுவந்து விசாரிப்பதாகவும் காவல்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.