புதுச்சேரி:
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு என்.ஆர்.காங்கிரஸ்தான் தலைமை வகிக்கிறது என்றும், முதல்வர் யார் என்ற குழப்பத்துக்கு வேலையில்லை என்றும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி யார் தலைமையில் உள்ளது எனத் தொடங்கி பல கேள்விகளை முன்னாள் முதல்வர் நாராயணசாமி எழுப்பியிருந்தார். இந்நிலையில், புதுச்சேரியில் தனியார் ஹோட்டலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி பேசியதாவது:
“கடந்த ஐந்து ஆண்டுகள் புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக கூட்டணியின் மோசமான ஆட்சி நடந்தது. புதுச்சேரி வளர்ச்சியை பத்து ஆண்டுகள் பின்னுக்கு அந்த ஆட்சி தள்ளியுள்ளது. இது அனைவரின் கருத்தாகவே உள்ளது. படித்த இளைஞர்களுக்கு ஐந்து ஆண்டுகளாக வேலைவாய்ப்பு இல்லை. அரசு வேலையும் தரவில்லை. தனியார் தொழிற்சாலைகளையும் கொண்டு வந்து வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை. மோசமான சூழலைக் கடந்த அரசு உருவாக்கிவிட்டது. எத்திட்டங்களையும் கடந்த ஐந்து ஆண்டுகளாகச் செயல்படுத்தவில்லை.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்களைக் கூட அவர்கள் செயல்படுத்தவில்லை. முன்னாள் முதல்வர் நாராயணசாமி, தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளதில் 85 விழுக்காடுகளைச் செய்ததாகக் கூறுகிறாரே தவிர ஒரு திட்டத்தின் பெயரையும் கூறுவதில்லை. ஏனெனில், ஒரு திட்டத்தைக் கூட அவர் நிறைவேற்றவில்லை. இப்படியிருந்தால் எப்படி புதுச்சேரி வளர்ச்சி இருக்கும்.
எதிர்க்கட்சி ஐந்தாண்டு செயல்படாவிட்டால் கவலையில்லை. ஆளும்கட்சி செயல்படாததுதான் தவறு. கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணிகளை ஆளும் கட்சியினர் எதுவும் செய்யவில்லை. ஓய்வூதியத் தொகையைக்கூட உயர்த்தித் தரவில்லை. என்ன ஆட்சி இது என மக்கள் வெறுத்துவிட்டனர். ஒரு சாதாரண அடிப்படை வசதி கூட செய்து தரவில்லை.
ஒன்றுமே காங்கிரஸில் செய்யாததால்தான் அக்கட்சியில் இருந்தே அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வெளியேறி விட்டனர். இதைச் சரி செய்தாக வேண்டும். எங்களுக்கு மக்கள் மீதும், புதுச்சேரி வளர்ச்சி மீதும் அக்கறை உள்ளது.
கூட்டணியில் முதல்வர் பதவி கிடைக்குமா, தருவார்களா என்ற சிறு குழப்பங்கள், கேள்விகள் எழுப்புகின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு என்.ஆர்.காங்கிரஸ் தலைமை வகிக்கிறது. முதல்வர் யார் என்ற குழப்பத்துகு வேலையில்லை.
தேர்தலில் வெல்வோம். அனைத்தையும் சரி செய்வோம். முக்கியமாக புதுச்சேரியில் அதிகாரம் தெரிந்து ஆள வேண்டும். அதிகாரச் சண்டையிலேயே ஐந்து ஆண்டு போய்விட்டது. பின்னுக்குத் தள்ளப்பட்ட புதுச்சேரியை முன்னுக்குக் கொண்டு வருவோம்”.
இவ்வாறு ரங்கசாமி தெரிவித்தார்.