அருள்மிகு அபய ஆஞ்சநேயர் (வாலறுந்த ஆஞ்சநேயர்) திருக்கோயில்,   ராமேஸ்வரம், ராமநாதபுரம் மாவட்டம்.

இலங்கை சென்று இராவணனை வென்று, சீதையை மீட்டு வந்த இராமருக்குத் தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க ராமேஸ்வரம் கடற்கரையில் சிவலிங்க பூஜை செய்ய எண்ணினார். அவரது பூஜைக்காக இலிங்கம் எடுத்து வர ஆஞ்சநேயர், கைலாயம் சென்றார். அவ்வேளையில் சீதாதேவி, மணலில் ஒரு இலிங்கம் பிடித்து வைத்தாள். ஆஞ்சநேயர் வரத் தாமதமாகவே, இராமர் மணல் இலிங்கத்தைப் பூஜை செய்து வழிபட்டார்.

அதன்பின்பு வந்த ஆஞ்சநேயர், நடந்ததையறிந்து கோபம் கொண்டார். வாலால் இலிங்கத்தை சுற்றி மணல் லிங்கத்தை பெயர்க்க முயன்றார். ஆனால் வால் அறுந்ததே தவிர, இலிங்கத்தை அசைக்கக்கூட முடியவில்லை. தவறை உணர்ந்த ஆஞ்சநேயர், செய்த குற்றம் நீங்க தீர்த்தம் உண்டாக்கி, சிவனை வழிபட்டார். இந்த ஆஞ்சநேயர், இத்தலத்தில் வாலறுந்த கோலத்தில் மூலவராக காட்சி தருகிறார்.

இரட்டை ஆஞ்சநேயர் தரிசனம்: இக்கோயிலில் ஆஞ்சநேயர் சன்னதி, எட்டு பட்டைகளுடன் கூடிய விமானத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தில் அபய ஆஞ்சநேயர், வாலறுந்த ஆஞ்சநேயர் என இரண்டு மூர்த்திகள் அருகருகில் காட்சி தருகின்றனர்.

அபய ஆஞ்சநேயர் பீடத்திற்கு கீழே ஒரு கோடி மூல மந்திர எழுத்துக்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது சிறப்பு. ஆஞ்சநேயருக்கு முன்புறம் ராமர் பாதம் இருக்கிறது. இத்தல ஆஞ்சநேயர் பக்தர்களின் பயத்தை போக்கி காத்தருள்பவர் என்பதால்,”அபய ஆஞ்சநேயர்” என்றழைக்கப்படுகிறார். வெள்ளிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. அன்று தேங்காய், வெல்லம், அவல் சேர்ந்த கலவையை விசேஷ நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றனர்.

சுயம்பு ஆஞ்சநேயர்: அளவில் சிறிய கோயில் இது. ஆஞ்சநேயர் உருவாக்கிய தீர்த்தம், கோயிலுக்கு பின்புறம் உள்ளது. கோயில் முகப்பில் கடல் மணலில் உருவான சுயம்பு ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். இவருக்கும் வால் கிடையாது. இந்த ஆஞ்சநேயர் சிலை, கடலில் கிடைக்கும் சிப்பி பதிந்த நிலையில் இருப்பது வேறெங்கும் காணக்கிடைக்காத அதிசயம். கோயில் வளாகத்தில் தலவிருட்சம் அத்தி இருக்கிறது.

இம்மரத்தில் இளநீரை கட்டி, ஆஞ்சநேயரிடம் வேண்டிக்கொள்ளும் வழக்கம் இருக்கிறது. வேண்டுதல் நிறைவேறியதும் ஆஞ்சநேயருக்கு, வேறு இளநீரால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். உக்கிரமாக இருந்து சிவலிங்கத்தை தகர்க்க முயன்றவர் என்பதால் குளிர்ச்சிப்படுத்தும்விதமாக இவ்வாறு செய்கிறார்கள். புரட்டாசி கடைசி சனிக்கிழமை, அனுமன் ஜெயந்தி, ஆனி ரேவதி நட்சத்திரம் ஆகிய மூன்று நாட்களில் மட்டும் இவருக்கு திருமஞ்சனம் செய்கின்றனர்.

கடல் மணலில் உருவான சுயம்பு ஆஞ்சநேயராக அருள்பாலிக்கிறார், வாலறுந்த ஆஞ்சநேயர். ஆஞ்சநேயரே இங்கு பிரதானம் என்பதால், பரிவார மூர்த்திகள் இல்லை.

திருவிழா:

புரட்டாசி சனிக்கிழமை, அனுமன் ஜெயந்தி.

பிரார்த்தனை:

புத்திர பாக்கியம் கிடைக்க, பயம், மனக்குழப்பம் நீங்க, பாதுகாப்பு உண்டாக இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

ஆஞ்சநேயரை வேண்டிப் பிரார்த்தனை நிறைவேறியவர்கள் வடை, வெற்றிலை மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

வழிகாட்டி :

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மேற்கு வாசல் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ., தூரத்தில் இக்கோயில் உள்ளது. ஆட்டோ உண்டு.

அருகிலுள்ள புகை வண்டி நிலையம் :

ராமேஸ்வரம்.

அருகிலுள்ள விமான நிலையம் :

மதுரை.

தங்கும் வசதி :

ராமேஸ்வரம்