மண்டபம் முகாமிலுள்ள ஈழத்தமிழ் அகதிகள் தாக்கப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“இராமேஸ்வரம், மண்டபம் முகாமில் வாழும் ஈழ உறவுகள் காவல்துறையினரால் தாக்கப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த மனவேதனையையும், அளவிட முடியா பெருங்கோபத்தையும் தருகிறது. போரில் உறவுகளை இழந்து, உடைமைகளை இழந்து, தாய்நிலத்தைப் பிரிந்து நிராதரவற்றவர்களாய் தமிழகத்திற்கு வந்திருக்கும் ஈழ உறவுகள் மீதான தாக்குதலை மனசாட்சியுள்ள எவராலும் ஏற்க முடியாது. வந்தாரையெல்லாம் வாழ வைக்கும் நிலத்தில் சொந்த இனத்தவர் அடித்து உதைத்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது சகித்துக்கொள்ள முடியா பெருங்கொடுமை. அதிகார வர்க்கத்தின் அத்துமீறல்களும், எளிய மக்கள் மீதான கோரத்தாக்குதல்களும் வன்மையானக் கண்டனத்திற்குரியவையாகும். நீதியின்பால் பற்றுகொண்டு, சனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு மானுடநேயத்தைப் பின்பற்றிக் கடைபிடிக்கும் எவராலும் இதனை அனுமதிக்க முடியாது.
கடந்த 7ஆம் தேதி அங்கு நடைபெற்ற சகாயமாத கோயில் திருவிழாவின்போது நிறைந்த மதுபோதையில் பெண்களிடம் அத்துமீற முயன்ற காவல்துறையினரின் போக்கை முகாம்வாழ் இளைஞர்கள் கண்டித்ததையொட்டி இவ்வகைத் தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டு, அவர்கள் மீது வழக்குகள் புனையப்பட்டிருக்கிறது. காவல்துறையினரின் இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயலைக் கண்டித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆளும் வர்க்கம் கண்டும் காணாதிருப்பது காவல்துறையினருக்கு அவர்கள் அளிக்கும் மறைமுக ஆதரவினை தெரிவிப்பதாகவே உள்ளது.
தமிழகத்திற்குத் தஞ்சம்தேடிவரும் ஈழத்தமிழ் சொந்தங்கள் இங்குச் சந்திக்கும் துன்பத்துயரங்கள் எண்ணிலடங்காதவை. ஈழத்தமிழில் பேசினாலே பயங்கரவாதி என்று முத்திரை குத்துவது, அவர்களை எத்தகைய பணிகளிலும் ஈடுபடவிடாமல் தொந்தரவு செய்வது, எப்பொழுதும் கண்காணிப்பிலேயே வைத்திருப்பது, நாள் முழுக்க உழைத்து அவர்கள் பெறும் ஊதியத்தை அபகரித்துக் கொள்வது, அவர்களது உடைமைகளைச் சேதப்படுத்துவது, ஆபாச வார்த்தைகளால் வசைபாடுவது, பெண்களிடமும், குழந்தைகளிடம் அத்துமீறி பாலியல் துன்புறுத்தல்களைத் தருவது, காரணமில்லாமல் அகதி முகாமுக்குள் அடைத்து சித்திரவதை செய்வது, அவர்களுக்கு அடிப்படை வசதிகள்கூடச் செய்துதராது இழுத்தடிப்பது, பொய்யாக வழக்குகளைப் புனைந்து சிறையிலடைப்பது என அவர்கள் எதிர்கொள்ளும் கொடுமைகள் சொல்லி மாளாதவையாகும். கடந்தாண்டு மதுரை உச்சம்பட்டி முகாமில் இரவீந்திரன் எனும் இளைஞர் உயர் மின்னழுத்த கம்பத்தில் ஏறி தற்கொலை செய்துகொண்டது ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக விளைந்தவையே!
இந்தியாவில் 6 ஆண்டுகளுக்கு மேலாக வாழும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் முதலான நாட்டினைச் சேர்ந்த அகதிகளுக்கெல்லாம் குடியுரிமை வழங்கும் இந்திய அரசானது, 20 ஆண்டுகளுக்கு மேலாக இம்மண்ணில் வாழும் ஈழ உறவுகளுக்கு அடிப்படை உரிமைகளையும், அடிப்படை வசதிகளையுமே தர மறுத்து மூன்றாம் தர மக்களை நடத்தி வரும் போக்கினை மாற்றிக்கொண்டு திபெத், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு வழங்கப்படுவது போலவே எல்லாச் சலுகைகளும் ஈழ உறவுகளுக்கு வழங்கப்பட்டு, அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். இத்தோடு, ஈழ உறவுகள் தாங்கள் கல்வி கற்பதற்கும், விரும்பிய பணிகளைச் செய்வதற்கும் எவ்வித இடையூறு இல்லாமையை உறுதிசெய்ய வேண்டும் எனவும், சிறப்பு முகாம் எனும் சித்திரவதை முகாமை மூடி அவர்களின் மறுவாழ்வுக்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
மேலும், மண்டபம் ஈழ முகாமிலுள்ள இளைஞர்கள் மீது தாக்குதல் தொடுத்த காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறேன். இதனைச் செய்ய மறுத்து, ஈழ உறவுகளை ‘அகதிகள்’, ‘அந்நியர்கள்’ என்றெண்ணி படுபாதகச்செயல்களை ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் தொடர்ந்து மேற்கொள்வார்களேயானால் மிகப்பெரிய எதிர்விளைவுகளை ஆட்சியாளர்கள் எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கிறேன்” இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.