ராமேஸ்வரம் :
ஏவுகணை நாயகன் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் முதலாவது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
ராமேஸ்வரம் – பேய்க்கரும்பு பகுதியில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்க இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
காலை 9 மணியளவில் விழா தொடங்கயிது. மத்திய அமைச்சர்கள் வெங்கைய்ய நாயுடு, மனோகர் பாரிக்கர், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் நிலோபர் கபில், மணிகண்டன் , ராமநாதபுரம் எம்.பி அன்வர்ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கலாமின் நினைவிடத்தில் மத்திய, மாநில அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் கலந்து கொண்டார்.
இதனை தொடர்ந்து கலாம் நினைவிட வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள 350 கிலோ எடையுள்ள, 7 அடி உயர கலாமின் வெண்கல சிலை திறந்து வைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து கலாமின் நினைவிடத்தில் அமைக்கப்பட உள்ள மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
விழாவில் மத்திய அமைச்சர்கள் பேசியது:
குடியரசுத் தலைவராக இருந்தபோது திருவள்ளுவர் சிலையை ஜனாதிபதி மாளிகையில் நிறுவியர் கலாம் என்றும் சாதி, மதம், மொழியை கடந்த அனைவரும் நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்றவர் கலாம் என்றும் பொன். ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார். மேலும் ஏழ்மையில் பிறந்து உழைப்பால் உயர்ந்தவர் அப்துல் காலம் எனவும் பொன். ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார்.
கலாம் தேசிய நினைவகப் பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்பட்டு திறக்கப்படும் எனவும் பொன்.ராதா உறுதி அளித்துள்ளார்.
ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் 100 முகங்கள் கொண்ட அப்துல் கலாமின் மணல் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. மணல் சிற்பம் செதுக்கிய குபேந்திரன் என்பவருக்கு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இந்தியா வல்லரசு என்ற நிலையை அடைய வேண்டும் என உழைத்தவர் அப்துல் கலாம் என மனோகர் பாரிக்கர் புகழாரம் சூட்டினார். கலாமின் கனவை நனவாக்க மத்திய பாடுபடுவதாக மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.
கலாம் நினைவு நாளை முன்னிட்டு ராமேஸ்வரம், பேய்க்கரும்பு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.