ராமநாதபுரம்: தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்து, ராமேஸ்வரர் மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் இன்று தொடங்கியது.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படையைக் கண்டித்து அறிவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்தம் தொடங்கியது.
வங்கக்கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி வருகிறது. மேலும், அவ்வப்போது தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது மட்டுமின்றி, அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து வருகின்றனர். ஏற்கனவே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை ஏலத்தில் விடுவதாக அறிவித்து இருக்கிறது. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இலங்கை நீதிமன்றமும், தமிழக மீனவர்களுக்கு கோடி கணக்கில் அபராதம் விதித்து வருகிறது.
இந்த விஷயத்தில், மத்திய, மாநில அரசுகள் கடிதம் எழுதுவதையே வாடிக்கையாக கொண்டு கண்ணாமூச்சி ஆடி வருகிறது. இந்த நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை நேற்று (பிப்ரவரி 23) சிறைபிடித்தது. இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.
ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு இரணிய தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடித்தது. இந்த நிலையில், மீண்டும் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருப்பது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், நேற்று 32 மீனவர்களை சிறைபிடித்த சம்பவத்தை கண்டித்தும் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக 700-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.