ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் உட்பட 39 மீனவர்கள், 2 படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை தமிழர்களுக்கு எதிரான தீர்மானத்தில், இலங்கைக்கு ஆதரவாக இந்திய அரசு வாக்களிக்காமல், வெளிநடப்பு செய்த நிலையில், இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள், நேற்று இரவு கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, தமிழக மீனவர்கள் 20 பேர் மற்றும் அவர்களின் 2 படங்குகளை பறிமுதல் செய்துள்ளது.
முன்னதாக நேற்றிரவு, புதுக்கோட்டையைச் சேர்ந்த 14 மீனவர்கள் 2 படகுகளிலும் காரைக்காலைச் சேர்ந்த 5 மீனவர்களும் ஒரு படகிலும் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களையும் இலங்கை கடற்படை செய்துள்ளது. மொத்தம் 39 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அழைத்துச்சென்றுள்ளது.
ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 39 பேர் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கை கடற்படையினர் மீண்டும் அங்களது அட்டூழியங்களை அரங்கேற்றி வருவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.