நுண்ணரசியல் என்றால் என்ன..?

தான் குளிக்கும்போது, குளியறைக்குள் நுழைய முற்பட்டார் ஆளுநர் என்று கவுரி என்ற பெண்மணி புகார் தெரிவித்ததாக பரபரப்பான செய்தி கிளம்பியிருக்கிறதே…

ஆளுநரின் ஆதிக்கத்தை.. அதாவது ஆய்வுகளை நிறுத்த.. தமிழக ஆளும் தலைகள் மூலம் கிளம்பிய.. அல்லது கிளப்பிவிடப்பட்ட செய்தியாக இது இருக்கலாம்.

இதுதான் நுண்ணரசியல்!

தி.மு.க.வுடன் ம.தி.மு.க. இணையுமா?

வைகோ எண்ணம் என்னவென்று நமக்குத் தெரியாது. ஆனால் இணைவதே சரி எனத் தோன்றுகிறது.

ஏனென்றால் தி.மு.க.வைவிட்டு அவர் வெளியேறிய.. அல்லது வெளியேற்றப்பட்ட நிகழ்வு கொள்கை சார்ந்தது அல்ல.

“தலைமைப் பதவிக்காக கருணாநிதியை கொல்லப்பார்க்கிறார்” என்றது தி.மு.க. தலைமை.

“மு.க.ஸ்டாலின் தலைமைப்பதவிக்கு வருவதற்கு நான் தடையாக இருப்பேன் என்று பொய்யாகக் கு குற்றம்சாட்டினார்கள்” என்றார் வைகோ.

கால ஓட்டத்தில் இடையிடையே இரு கட்சிகள் கூட்டணி வைத்த்தும், ஆர்.கே. நகர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ம.தி.மு.க. ஆதரிப்பதும் அரசியல் கட்சிகளிடையே இயல்பான விசயம்தான்.

ஆனால், “தலைமப்பதவிக்கு (கட்சித் தலைமை.. ஆட்சியில் முதல்வர்) மு.க.ஸ்டாலின் வருவதற்கு தான் தடையாக இருப்பதால் கொலைக்குற்றம் சாட்டினர்” என்று குமுறிய வைகோ, இன்று,, “மு.க.ஸ்டாலின்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர்” என்று ஆரூடம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

இந்த ஒரு விசயம்தான் ம.தி.மு.க. உருவாக வழிவகுத்தது. இப்போது அது பொருட்டில்லை. கொள்கை ரீதியான பிளவுகள் இல்லை.. ஆக, தி.மு.க.வுடன் ம.தி.மு.க. இணைந்தால் ஆச்சரியப்படத் தேவையில்லை.

அப்படி நடந்தால் ம.தி.மு.க.வினருக்கும் நல்லதுதான்.

 

ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என்று வைகோ பேசியதை அடுத்து மதிமுகவினர் சிலர், கட்சியைவிட்டு விலகிவிட்டனராமே..

“விட்டனராமே” என்று கேட்கும் நிலையில்தான் இந்தத் தகவல் இருக்கிறது. முகநூலில் மட்டும் களமாடும் சிலர், வைகோவின் இந்தப் பேச்சை விமர்சித்த்தை பார்க்க முடிந்தது.  மற்றபடி களத்தில் பணியாற்றும் ம.தி.மு.க.வினர் யாரும் விலகியதாகத் தெரியவில்லை.

இல. கணோசன்

சமீபத்தில் உங்களை வியக்கவைத்த அரசியல் தலைவர்?

அரசியல் தலவர்களின் அன்றாட நடவடிக்கைகளே வியக்கவைப்பவைதான். அத்தனை திட்டமிடல், தொலை நோக்கு.. இத்தியாதிகள் இருக்கும்.

ஆனால் சமீபத்தில் மிக வியக்க வைத்தவர் பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன்.

கடந்த ஐந்தாம் தேதி, ஜெயலலிதாவின் முதல் நினைவு தினத்தக்கு அவர் வெளியிட்ட அஞ்சலி அறிக்கையைப் படித்துப் பாருங்கள்,  நீங்களும் வியப்பீர்கள்.

கமல் – விசால்

 

நடிகர் விஷால் பின்னணியில் கமல் இருக்கிறார் என்று நினைக்கிறீர்களா?

இன்றைய டிஜிட்டல் உலகில் இது மிகப் பழைய கேள்வி. ஆனாலும் சொல்கிறேன்.

தன்னை முன் மொழிந்தவர்களை தக்க வைக்க தெரியவில்லை விஷாலுக்கு. தவிர, தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு மாநில தேர்தல் ஆணைய முகவரிக்கு கடிதம் எழுதுகிறார்.

நிச்சயம், இவர் பின்னால் கமல் இருக்க வாய்ப்பில்லை.

தவிர, தற்போது “அரசியல்வாதி கமல்” பின்னால் கமலே இல்லையே. அவர் விஸ்வரூபம் 2 படப்பிடிப்பில் தீவிரமாகிவிட்டாரே!

 

திலகவதி

சமீபத்தில் மனதைப் பாதித்த விசயம்?

 தமிழக காவல்துறையின் முன்னாள் டி.ஜி.பி. திலகவதி ஐ.பி.எஸ். அவர்களை சந்தித்த போது பல விசயங்கள் பேசினார்.

அதில் ஒன்று மனதை மிகவும் பாதித்தது.

கணவன் வெளியூர் சென்றிருக்க.. வீட்டில் மனைவி மட்டும் தனித்திருந்திருக்கிறார். அந்த இரவில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்டான்.

இந்த விசயத்துக்காக அவ்வப்போது திலகவதியை சந்திப்பார் அந்தப் பெண்மணி. ஒருமுறை அந்தப் பெண்மணி, “அந்தக் கொள்ளையன் என்னைக் கொன்றுவிட்டே நகைகளைக் கொள்லையடித்துச் சென்றிருக்கலாம்” என்று அழுதாராம்.

ஏன் என்று திலகவதி கேட்க, “கொள்ளையன் நகைகளை மட்டும் கொள்ளையடித்துச் சென்றானா அல்லது உன்னை பலாத்காரப்படுத்தியும் சென்றானா” என்று கேட்டு தினமும் டார்ச்சர் செய்கிறார் என் கணவர்” என்று கதறினாராம் அந்தப் பெண்.

அந்தப் பெண்ணின் நிலை, அவரது கணவரின் மனநிலை.. இரண்டும் மனதை மிகவும் பாதித்தது.

(பிறகு இந்தச் சம்பவத்தை சிறுகதையாகவும் எழுதினார் திலகவதி)

 

பறை

பறையடிப்பது இழிவு. ஆகவே தாழ்த்தப்பட்ட மக்கள் பறை அடிப்பதை நிறுத்த வேண்டும் என்று தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்களே..

பறை இசை என்பது தனியொரு சாதிக்கான அடையாளம் அல்ல. அது ஒட்டுமொத்த தமிழரின் அடையாளம்.

ஆனால் பறையடிப்போரை சாதிப் பெயரைச் சொல்லி ஒதுக்கிவைத்த அவமானப்படுத்தியது.. படுத்துகிறது இந்த சமுதாயம். பறை இசையையும் ஏதோ மரணத்துக்கான இசை என்பதாக முட்டாள்த்தனமாக குறுக்கிவிட்டது இந்த சமூகம்.

இதனால்தான் தாழ்த்தப்பட்டவர்கள் மனதில் பறையே வேண்டாம் என்கிற எண்ணம் ஏற்படுகிறது. இது அவர்கள் தவறல்ல. வலி.

இதைப்போக்க சாதி ஏற்றத்தாழ்வுகள் ஒழிய வேண்டும். அதற்கு எத்தனை காலம் ஆகுமோ..

அதற்கு முன்பாக இன்னொன்று செய்யலாம்..

நம்மில் பலர் நினைப்பது போல பறை என்பது மரண சடங்குகளுக்கான இசை மட்டும் அல்ல. பறை இசையின் ஒரு பகுதிதான் மரண சடங்குக்கானது.  மங்கல விழாக்களுக்கான இசையும் பறையில் உண்டு.

“திருணம், கோயில் விழா என்று ஒவ்வொரு விழாக்களுக்கும் ஒவ்வொரு விதமான பறையிசை உண்டு” என்று தமிழிசை பேராசிரியர் சொன்னது உண்டு.

இந்த நோக்கத்துடன் பல பறையிசைக் குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு  வருகின்றன.

ஆகவே நாம் அனைவரும் நமது குடும்பத்தின் மங்கல விழாக்கள், வியாபார விழாக்கள் அனைத்துக்கும் பறை இசையை ஒலிக்கச் செய்ய வேண்டும்.

இதன் மூலம் பறை இசை பற்றிய தவறான புரிதல் சமூகத்தில் இருந்து விலகும்.

இதை முதலில் தமிழார்வமுள்ள கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் துவக்கி வைக்க வேண்டும்.