சென்னை: அதிமுக அரசுக்கு எதிராக ராமதாஸ் போராட்டம் அறிவித்துள்ளது, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணியில்,  கூடுதல் தொகுதிகளை பெறும் வகையிலான மிரட்டல் அறிவிப்பு என சமூக வலைதளங்களில்  விமர்சிக்கப்பட்டு வருகிறது.

பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் கூட்டு பொதுக்குழு கூட்டம்  நவம்பர் 22ந்தேதி அன்று காணொளி காட்சி மூலம் நடத்தப்பட்டது. பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் முன்னிலையில் நடந்த இந்த பொதுக் குழுவில் வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் அரங்க.வேலு, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  இதில் தமிழக சட்டமன்ற தேர்தல் உள்பட  வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில் தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி திசம்பர் 1ஆம் தேதி முதல் 31 வரை முதற்கட்ட தொடர் போராட்டம், ஜனவரி மாதத்தின் பிற்பாதியில் தமிழகம் தழுவிய அளவில் மிகப்பெரிய அறப்போராட்டத்தை நடத்துவதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில், உரையாற்றிய ராமதாஸ், “கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டனர். இதுவரை ஆட்சியில் இருந்த அனைத்துக்கட்சியினரும் நம்மை ஏமாற்றினார்கள். வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். அதன்பின் பலமுறை கடிதம் எழுதினோம். ஆனால், எனக்கு எந்த பதிலும் வரவில்லை. கூட்டணி கட்சியாக இருந்தாலும் நமது கோரிக்கைகளை ஏற்க மறுக்கிறார்கள்.  ஆட்சியாளர்களுக்கு இறுதியாக ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன் என்றவர், “நீங்கள் கேட்பீர்களோ அல்லது கேட்க மாட்டீர்களோ அது உங்கள் விருப்பம். ஆனால் 20 விழுக்காடு இடஒதுக்கீடு எங்களுக்கு கண்டிப்பாக வழங்க வேண்டும்.

கலைஞர் எங்களுக்கு அழுகிய கனியை கொடுத்தார். நீங்கள் நல்ல சேலத்து மாங்கனியை கொடுங்கள் என்று கேட்கிறோம். வன்னியர்களுக்கு 20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு வழங்குங்கள்.  முதலில் 20 விழுக்காடு இடஒதுக்கீடு தாருங்கள். மீதமுள்ளதை நாங்கள் பிறகு பார்த்துகொள்கிறோம். வன்னியர் சமுதாயத்தின் போராட்டத்தை, நாங்கள் கேட்கும் இடஒதுக்கீட்டைக் கொடுத்து முடிவுக்கு கொண்டு வருவது முதல்வராகிய உங்கள் கைகளில் தான் உள்ளது” என்று மிரட்டியுள்ளார்.

இந்த நிலையில், ராமதாசின் போராட்ட அறிவிப்பு, எடப்பாடி அரசை மிரட்டிப்பார்க்கவே என்று நெட்டிசன்கள் சமுகவலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 4 கூட்டணிகள் களத்தில் நின்றன.  திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையலான கூட்டணி, பாஜக தலைமையிலான கூட்டணி, தேமுதிக தலைமையிலான மக்கள் நலக்கூட்டணி.

திமுக கூட்டணியில்,  திமுக 174 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 41 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 5 இடங்களிலும், மனிதநேய மக்கள் கட்சி 4 இடங்களிலும், மக்கள் தேமுதிக 3 இடங்களிலும், புதிய தமிழகம் கட்சி 4 இடங்களிலும், பெருந்தலைவர் மக்கள் கட்சி 1 இடத்திலும், சமூக சமத்துவபடை 1 தொகுதியிலும் போட்டியிட்டன.

அதிமுக கூட்டணியில், அதிமுக 227 இடங்களிலும், மனிதநேய ஜனநாயக கட்சி 2 இடத்திலும், இந்திய குடியரசு கட்சி 1 இடத்திலும், சமத்துவ மக்கள் கட்சி 1 இடத்திலும், கொங்குநாடு இளைஞர் பேரவை 1 இடத்திலும், முக்குலத்தோல் புலிப்படை 1 இடத்திலும் போட்டியிட்டன. தமிழ்மாநில முஸ்லிம் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை.

தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியில், தேமுதிக 104 இடங்களிலும், மதிமுக 29 இடங்களிலும், மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி 25 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி 25 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் 25 இடங்களிலும் போட்டியிட்டன.

பாஜக தலைமையிலான கூட்டணியில், பாஜக 141 இடங்களிலும், இந்திய ஜனநாயக கட்சி 45 இடங்களிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் 24 இடங்களிலும் கொங்கு ஜனநாயக கட்சி 4 இடங்களிலும் போட்டியிட்டன.

பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சிகள் தனித்து களம் கண்டன.  தங்களது கட்சிக்கு மக்களிடையே செல்வாக்கு இருப்பதாக கூறிக்கொண்டு, இறுமாப்புடன்  234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை  அறிவித்தன. ஆனால், தமிழக மக்களுக்கு அவர்களுக்கு அல்வா கொடுத்து விட்டனர்.

தேர்தலில் தனது மகனின் முதல்வர் கனவை நிறைவேற்றும்வகையில்,   அன்புமணி ராமதாசை முன்னிலைப்படுத்தி பாட்டாளி மக்கள் கட்சி தேர்தலை சந்தித்தது. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது..  ஆனால், ஒரு தொகுதிகளில் கூட அவர்களால் வெற்றி பெறவில்லை.  வன்னியர்கள் வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும் என்று ஆவலோடு தனித்து தேர்தலை கண்ட பாமகவுக்கு வன்னியர்களே வாக்குகளை போடவில்லை. இதனால் பாமக  மண்ணை கவ்வியது. இதுகடுமையாக விமர்சனங்களை எழுப்பியது. 

அதுபோல பாஜக, தேமுதிக, நாம் தமிழர் போன்ற கட்சிகளும் ஒரு இடங்களைக்கூட கைப்பற்ற முடியாமல், தமிழக மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டன.  இந்த நிலையில்தான், கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, பாஜக, பாமக, தேமுக போன்ற கட்சிகள் அதிமுக கூட்டணியில் கடும்  இழுபறிக்கு பிறகு இடம்பெற்றன. 

அதிமுக கூட்டணி 134 இடங்களையும், திமுக கூட்டணி 98 இடங்களையும் கைப்பற்றியது. இரு கட்சிகளுக்கும் இடையே ஒரு சதவிகித வித்தியாசமாக இருந்தது. அதாவது அதிமுக கூட்டணி 41 விழுக்காடு வாக்குகளும், திமுக கூட்டணி 40 விழுக்காடு வாக்குகளையும் பெற்றிருந்தன.  ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார்.

ஆனால், ஜெயலலிதா மறைந்த பிறகு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், அதிமுகவில் சரியான தலைமை இல்லாததை கணித்துக்கொண்ட பாமக, பாஜக போன்ற அரசியல் கட்சிகள், அதிமுக கூட்டணியில் இணைந்ததுடன், அதிமுக அரசையும் மிரட்டி வந்தன.  ஜெ.இல்லாத நிலையில், அதிமுக சந்தித்த  முதல் தேர்தல் என்பதாலும், அதிமுகவில் எடப்பாடி, ஓபிஎஸ் இடையே நடைபெற்று வந்த உள்கட்சி மோதல்களை பயன்படுத்தி, பாமக தனது அரசியல் சித்து விளையாட்டுக்கள் மூலம்,  தேர்தலில் படுதோல்வி அடைந்த நிலையிலும்,  அதிமுக தயவுடன், அன்புமணி நாடாளுமன்ற மேலவை எம்.பி.யாக பதவி பெற்றார்.

இதுமட்டுமின்றி, இந்த சட்டமன்ற தேர்தலில் பாமக தனித்து நின்றால், பாமகவுக்கு கிடைக்கும் வன்னியர் வாக்குகளும்  பிரிந்துபோய்விடும். மீண்டும் நிராயுதபாணியாக நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டும் என பயம் காரணமாக,  திமுக கூட்டணியில இடம்பெற ரகசிய முயற்சி மேற்கொண்டது. ஆனால்,  பாமகவை திமுக கூட்டணியில் சேர்க்க மாட்டோம் என ஸ்டாலின் பகிரங்கமாக தெரிவித்துவிட்ட நிலையில், வேறுவழியின்றி,  பாமக,  அதிமுக கூட்டணியை கெட்டியாக பிடிக்கத் தொடங்கி உள்ளது.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில்தான், தற்போது 2021 தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளன. பாஜக ஒருபுறம் அமித்ஷா மூலம் எடப்பாடி தலைமையை மிரட்டி வரும் நிலையில், மற்றொருபுறம் பாமக போராட்டம் என்ற பெயரில் அதிமுக தலைமைக்கு குடைச்சல் கொடுக்கத் தொடங்கி உள்ளது.

பாஜக அதிகபட்சமாக 60 தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டுள்ள நிலையில், பாமகவும், பாஜகவுக்கு இணையான அல்லது அதிக தொகுதிகளை தங்களுக்கு தர வேண்டும்என்று போர்க்கொடி தூக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், தமிழக அரசியல் களத்தில் திமுக வெகுவேகமாக சட்டமன்ற தேர்தல் வெற்றியை நோக்கி முன்னேறிச்செல்லும் நிலையில், அதிமுகவோ, கூட்டணி கட்சியினரின் நெருக்குதல் காரணமாக நிம்மதியிழந்து உள்ளதாக கூறப்படுகிறது.  சமீப காலமாக அதிமுக அரசின் இடஒதுக்கீடு போன்ற நடவடிக்கைகள் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில, பாமகவும் இடஒதுக்கீடு என்ற போர்வையில் அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்க முன்வந்துள்ளது. இது பாமகவின் பக்கா  அரசியல் பேரம் என்றும் சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளை பெறவே பாமக இந்த போராட்டம் என்ற நாடகத்தை அரங்கேற்ற தயாராகி வருகிறது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

பாமகவின் மிரட்டலுக்கு தமிழகஅரசு அடிபணியுமா? என்பது ஓரிரு மாதங்களில் தெரிய வரும்.

2011ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் பாமக திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. அப்போது 30 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக வெறும் 3 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது குறிபபிடத்தக்கது.