பாமக புத்தாண்டு பொதுக்குழுவில் கட்சியின் புதிய இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இளைஞரணி தலைவராக இருந்து வந்த ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன் அந்தப் பதவியில் இருந்து ஏற்கனவே விலகியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் புத்தாண்டு பொதுக்குழுவில் பாமக நிறுவனர் ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் மகன் முகுந்தனை இளைஞரணி தலைவராக ராமதாஸ் அறிவித்தார்.
தமிழ்குமரன் பதவி விலகிய நிலையில் புதிய தலைவராக முகுந்தன் என ராமதாஸ் அறிவித்ததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதை அடுத்து அன்புமணி- ராமதாஸ் இடையே மேடையிலேயே வார்த்தை மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து மைக்கில் உரக்கப்பேசிய ராமதாஸ் “இது நான் உருவாக்குன கட்சி.. நான் சொல்பவர்கள் தான் கட்சியில் இருக்கணும் இல்லைன்னா கட்சியை விட்டு போங்க” என கூறியதை அடுத்து அன்புமணி அப்செட் ஆனதால் தன் கையில் இருந்த மைக்கை சட்டென தூக்கி மேஜை மீது போட்ட அன்புமணி சிறிது நேரம் கழித்து கூட்டம் முடிந்ததும் வாடிய முகத்துடன் அங்கிருந்து வெளியேறினார்.
பாமக இளைஞரணி தலைவராக ராமதாஸ் பேரன் முகுந்தன் நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து மேடையிலேயே பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி இடையே வாக்குவாதம் நிகழ்ந்த நிலையில் “நான் சொல்பவர்கள் தான் கட்சியில் இருக்கணும் இல்லைன்னா கட்சியை விட்டு போங்க” என்று ராமதாஸ் பேசியது அந்த கட்சிக்காக மாடாய் உழைத்த தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இருந்தபோதும் பேரனுக்கு பதவி வழங்குவதில் தந்தை – மகன் இடையிலான இந்த மோதல் சிறிய சலசலப்பு தான் என்று தொண்டர்களிடம் வழக்கமான சால்ஜாப்பு சொல்லி நிர்வாகிகள் சமாளித்துள்ளனர்.