திண்டிவனம்
கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய மண்டலம் அமைக்க அனைத்துத் தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், திமுக மட்டும் அமைதி காக்கும் மர்மம் என்ன என்று பா.ம.க. நிறுவரனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
“கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 45 கிராமங்களில் உள்ள 57,345 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி பெட்ரோக்கெமிக்கல்ஸ் முதலீட்டு மண்டலம் அமைக்க பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய மண்டலம் அமைக்க அனைத்துத் தரப்பிலும் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இப்பிரச்சினையில் திமுக தரப்பில் கடைபிடிக்கப்பட்டு வரும் அமைதி பல்வேறு ஐயங்களை எழுப்பியிருக்கிறது.
பெட்ரோலிய மண்டலத் திட்டத்தின்படி பெருமளவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும், எண்ணெய் கிடங்குகளும் அமைக்கப்பட்டால் அந்த இரு மாவட்டங்களும் வாழத் தகுதியற்றவையாக மாறி விடும். இப்படி ஒரு மோசமானத் திட்டத்தை கடுமையான வார்த்தைகளால் கண்டிப்பதில் திமுகவுக்கு என்ன தயக்கம்?
நாகை, கடலூர் மாவட்டங்களில் பெட்ரோலிய மண்டலம் அமைக்கும் திட்டத்திற்கான இடங்கள் கடந்த 2007-08ஆம் திமுக ஆட்சியில் தான் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. திமுகவைச் சேர்ந்த மு.க. அழகிரி மத்திய உரம் மற்றும் இரசாயனத்துறை அமைச்சராக இருந்த போது 2012-ஆம் ஆண்டில் தான் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. இப்படியாக தங்களின் குழந்தையான நாகை, கடலூர் மாவட்ட பெட்ரோலிய மண்டலத்தை நாமே எப்படி எதிர்ப்பது என்ற மன உறுத்தல் காரணமாகத் தான் இந்த விஷயத்தில் திமுக அமைதி காக்கிறதா? என்பதை ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்.
இவற்றையெல்லாம் தாண்டி, முந்தைய திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை செயலாளராக இருந்து, ஆட்சி மாற்றத்திற்கு முன்பாக, மிகவும் பாதுகாப்பான முறையில் விருப்ப ஓய்வு அளித்து அனுப்பி வைக்கப்பட்ட தமது நண்பர் இராமசுந்தரம் தான் இத்திட்டத்தைச் செயல்படுத்தும் நாகார்ஜுனா உரம் மற்றும் இரசாயன நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியாக இருப்பதால் அந்த பாசம் தான் இத்திட்டத்தை எதிர்க்கத் தடையாக உள்ளதா? என்பதை விளக்குவதும் நல்லது.
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டமாக இருந்தாலும், கைவிடப்பட்ட மீத்தேன் திட்டமாக இருந்தாலும் அவற்றுக்கு அனுமதி அளித்தது திமுக அரசு தான். பெட்ரோலிய மண்டலம் அமைப்பதற்கு அனுமதி அளித்த பாவத்திலும் திமுகவுக்கு பங்குண்டு. அத்தனை அழிவுத்திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி விட்டு, அதனுடன் தங்களுக்கு சம்பந்தமில்லை என்பது போல திமுக நடத்தும் நாடகங்களை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள். நேரம் வரும் போது அதிமுகவுடன் சேர்த்து திமுகவையும் மக்கள் தண்டிப்பர்” – இவ்வாறு தனது அறிக்கையில் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.