பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசை அவரது தைலாபுரம் இல்லத்தில் இன்று நேரில் சென்று சந்தித்த அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

புதுவையில் நேற்று நடைபெற்ற கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் தொடர்பாக ராமதாஸ் – அன்புமணி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த பாமக நிர்வாகிகள் கூட்டம் முடிந்து வெளியே வந்த ராமதாஸின் காரை சுற்றிவளைத்து கெரோ செய்தனர்.

பாமக-வின் மதிப்பு உயர்ந்து வருவதாகக் கூறப்படுவதை அடுத்து 2026 சட்டமன்ற தேர்தலில் கனமான கூட்டணியில் இடம்பிடிக்க தேவையான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த விவகாரம் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையிலான மோதலாகப் பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே சுமூகமான நிலையை ஏற்படுத்த கட்சியின் மூத்த நிர்வாகி ஜி.கே. மணி முயற்சி மேற்கொண்டார்.

அதேவேளையில், இளைஞரணி தலைவர் என்று நேற்று ராமதாசால் அறிவிக்கப்பட்ட முகுந்தன் தனக்கு அந்த பதவி வேண்டாம் என்ற எண்ணத்தில் இருப்பதாகவும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பே போதும் என்று கூறியதாகவும் தெரிகிறது.

இதையடுத்து இன்று காலை தைலாபுரம் தோட்டம் சென்ற அன்புமணி பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ஒரு மணி நேரம் வரை நீடித்த இந்த ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி “கட்சியின் வளர்ச்சி, சட்டமன்றத் தேர்தல், சாதிவாரி கணக்கெடுப்பு, சித்திரை முழு நிலவு பொதுக்கூட்டம் உள்ளிட்டவை குறித்து பேசினோம்.

ஐயா எப்போதும் எங்களுக்கு ஐயாதான்.

பா.ம.க. ஒரு ஜனநாயக கட்சி, கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெறுவது சகஜம்தான்.

இது பா.ம.க.வின் உட்கட்சி பிரச்சினை இதுகுறித்து மற்றவர்கள் விமர்சிக்கத் தேவையில்லை” என்று கூறினார்.

பாமக இளைஞரணி தலைவர் நியமனம்… ராமதாஸ் – அன்புமணி இடையே கருத்து வேறுபாடு… சமாதான தூதராக தைலாபுரம் சென்ற ஜி.கே. மணி…