சென்னை: புதிய தலைமைச் செயலாளர் நியமனம் தொடர்பாக மரபுகள் அனைத்தையும் தூக்கிப் போட்டு மிதித்துள்ளனர் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
“தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து க.ஞானதேசிகன் நீக்கப்பட்டு, புதிய தலைமைச் செயலாளராக பி. இராம மோகன் ராவ் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஜெயலலிதா ஆட்சியில் தகுதிக்கும் திறமைக்கும் மரியாதை இல்லை: ஊழலுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளுக்கும், அதிகாரத் தரகர்களாக இருக்கும் அதிகாரிகளுக்கும் தான் மரியாதை என்பதற்கு புதிய தலைமைச் செயலாளராக இராம மோகன் ராவ் நியமிக்கப்பட்டிருப்பது தான் உதாரணம் ஆகும். இந்த நியமனம் கண்டிக்கத்தக்கது
தலைமைச் செயலாளர் நிலையில் இருக்கும் அதிகாரிகளில் மூத்தவரை தலைமைச் செயலாளராக நியமிப்பது தான் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த மரபு. ஆனால், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் இந்த மரபு காற்றில் பறக்கவிடப்பட்டது. தமிழ்நாடு பிரிவு (Tamil Nadu Cadre) ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் 24 பேர் தலைமைச் செயலாளர் நிலையில் உள்ளனர். இவர்களில் இராம மோகன் ராவ் 23 ஆவது இடத்தில் உள்ளார். தலைமைச்செயலாளர் நிலையில் உள்ள அதிகாரிகளில் மத்திய அரசு பணிகளில் இருப்பவர்களை விலக்கிவிட்டு பார்த்தால், 13 பேர் தமிழக அரசு பணிகளில் உள்ளனர். அவர்களில் இராம மோகன் ராவ் 12 ஆவது நிலையில் உள்ளார்.
இராம மோகன் ராவை விட தகுதியும், திறமையும் உள்ள 1981 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் 22 பேர் இருக்கும் நிலையில் அவர்கள் அனைவரையும் புறக்கணித்து விட்டு, 1985 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இராம மோகன் ராவுக்கு தலைமைச் செயலாளர் பதவியை முதல்வர் ஜெயலலிதா வழங்கியிருக்கிறார். மூத்த அதிகாரிகள் 22 பேரை விலக்கிவிட்டு இராமமோகன் ராவை தலைமைச் செயலராக நியமிக்கும் அளவுக்கு அவருக்கு சிறப்புத் தகுதி ஏதேனும் உள்ளதா? என்று கேட்டால், இல்லை என்பது தான் தமிழக அரசியல் நிலவரம் அறிந்த அனைவரின் பதிலாக இருக்கும்.
ஆனால், மூத்த அதிகாரிகளுக்கு இல்லாத சில சிறப்புத் தகுதிகள் இராம மோகன் ராவுக்கு உள்ளன. ஆட்சியாளர்களின் ஊழல்களுக்கு உதவியாக இருப்பார், அதிகாரத் தரகராக இருப்பார், அமைச்சர்கள் எந்தெந்த பணிகளுக்காக யாரிடம் பேரம் பேசுகின்றனர் – அதற்காக எவ்வளவு தொகை கைமாறுகிறது என்பன உள்ளிட்ட விவரங்களை சேகரித்து முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவிப்பது ஆகியவை தான் அவருக்கு உள்ள தகுதிகளாகும். கடந்த 5 ஆண்டுகள் முதலமைச்சரின் செயலாளராக பணியாற்றிய போது தமது திறமைகளை அவர் சிறப்பாக வெளிப்படுத்தியதற்கான பரிசு தான் இப்பதவி என்று கூறப்படுகிறது.
முதலமைச்சர் அலுவலகத்தில் சிறப்புப் பணி அதிகாரியாக சாந்தா ஷீலா நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பிரிவைச் சேர்ந்த இவர் மத்திய அரசில் பணியாற்றி 31.07.2010 அன்று ஓய்வு பெற்றார். இவர் தகுதியும், திறமையும் மிக்கவர், நேர்மையானவர் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், 6 ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்ற வெளிமாநிலத்தைச் (கேரளா) சேர்ந்த ஒருவரை அழைத்து வந்து தமிழ்நாடு திட்டக்குழுவின் தலைவராக 5 ஆண்டுகள் பதவி வழங்கி, அப்பணி முடிந்தவுடன் முதல்வர் அலுவலகத்தில் சிறப்புப் பணி அதிகாரியாக நியமிக்க வேண்டுமா? இப்பதவியை வகிக்க தமிழகத்தைச் சேர்ந்த பணியிலுள்ள அதிகாரி எவரும் இல்லையா? என்பது தான் இப்போதைய வினா.
ஏற்கனவே 2014ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற ஷீலா பாலகிருஷ்ணன் அரசு ஆலோசகராகவும், 2012 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற வெங்கட்ரமணன் முதலமைச்சரின் முதலாவது செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தகுதியுள்ள அதிகாரிகளின் வாய்ப்புகளை பறிக்கும் செயல் என்பதுடன், ஆட்சியாளர்களின் முறைகேடுகளுக்கு துணையாக இருந்தால் பதவி நீட்டிப்பு கிடைக்கும் என்ற தோற்றத்தையும் ஏற்படுத்தி விடும். தமிழகத்தில் நல்லாட்சியை நடத்துவதற்கு இத்தகைய செயல்கள் ஒருபோதும் உதவி செய்யாது.
ஒரு மாநிலத்தில் புதிய அரசு அமைக்கப்படும் போது அது நல்லாட்சியை வழங்குமா? என்பது அந்த அரசை நிர்வகிக்க எத்தகைய அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதிலிருந்தே தெரிந்து விடும். ஊழலுக்கு உடந்தையாக இருக்கும் இராம மோகன் ராவ் தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டு இருப்பதிலிருந்தே தமிழக அரசு ஊழல் திசையில் தான் பயணிக்கும் என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது” – இவ்வாறு தனது அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.