ரோடக்: வன்புணர்வு மற்றும் கொலைக் குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவித்து வரும் டிஎஸ்எஸ் தலைவர் குர்மீத் ராம் ரஹீம், தனக்கு பரோல் வழங்க வேண்டி சமர்ப்பித்த விண்ணப்பத்தை திரும்பப் பெற்றுக்கொண்டார்.
தனது வயலைப் பார்வையிட வேண்டுமென்பதற்காக அவர் 42 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால், தற்போது அந்த விண்ணப்பத்தை திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளார்.
தற்போது 51 வயதாகும் குர்மீத் ராம் ரஹீம், இரண்டு வன்புணர்வு வழக்குகள் மற்றும் ஒரு கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இவர் சிறையில் இருக்கிறார்.
கிட்டத்தட்ட 2 ஆண்டுகளை சிறையில் கழித்துவிட்ட நிலையில் இவர் பரோல் பெற தகுதியானவரே. சிறைத்துறை கண்காணிப்பாளரும் இவருக்கு நன்னடத்தை சான்றிதழ் வழங்கி, மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், இவர் தனது பரோல் விண்ணப்பத்தை திரும்பப் பெற்றுள்ளார்.
கடந்த 2017ம் ஆண்டு இவரைக் கைதுசெய்ய நடந்த முயற்சியின்போது, பெரிய வன்முறை ஏற்பட்டது என்பது நினைவிருக்கலாம்.