சண்டிகர்:

பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் இன்று அறிவித்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இதனால் ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் வன்முறை வெடித்துள்ளது.

முன்னதாக தீர்ப்பையொட்டி நூற்றுக்கணக்கான கார்களின் அணிவகுப்புடன் ராம் ரஹீம் நீதிமன்றம் வந்தார். நீதிமன்ற வளாகம் மற்றும் பஞ்ச்குலா பகுதியில் ஆயிரகணக்கான ஆதரவாளர்கள் குவிந்திருந்தனர். எந்த நேரத்திலும் வன்முறை வெடிக்கலாம் என்ற சூழ்நிலை இருந்ததால் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ரெயில், வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. ராம் ரஹீம் குற்றவாளி என அறிவித்தவுடன் அவர் கைது செய்யப்பட்டார். தீர்ப்பு விபரம் 28ம் தேதி வெளியிடப்படும் என நீதிபதிகள் கூறினர். ராம் ரஹீம் கைது செய்யப்பட்டவுடன் எதிர்பார்த்தபடியே அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். ஆங்காங்கே தீவைப்பு சம்பங்கள் நடந்தது. இதில் பலர் காயமடைந்தனர்.

முன்னதாக நீதிமன்றத்தில் பஞ்ச்குலா பகுதியில் ராம் ரஹீம் ஆதரவாளர்கள் குவிந்திருப்பதால் பதற்றம் நிலவியது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், ‘‘தேவைப்பட்டால் பாதுகாப்பு படையினர் ஆயுதங்களை பயன்படுத்த வேண்டும்’’ என்று கூறியது.

பஞ்சாப், ஹரியான உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) சரோன், நீதிபதிகள் அவினேஷ், சூர்ய காந்த் ஆகியோர் ‘‘வன்முறையில் ஈடுபடுவோர் மீது பாதுகாப்பு படையினர் ஆயுதங்களை பயன்படுத்த ஹரியானா மாநில அரசு தயக்கம் காட்ட கூடாது’’ நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

‘‘இதில் அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள் யாரேனும் தலையிட்டால் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மாநில மக்களின் பாதுகாப்பை அரசு உறுதிபடுத்த வேண்டும்’’ என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

மேலும், மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை குறித்த அறிக்கையை அரசு வக்கீல் மகாஜன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ‘‘35 கூடுதல் துணை ராணுவப் படைகள் பஞ்சகுலா பகுதியில் குவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 40 படைகள் வந்து கொண்டிருக்கின்றன. ராம் ரஹீம் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது 800 வாகனங்கள் உடன் வந்ததாக மீடியாக்களில் வெளியான செய்தியில் உண்மையில்லை. அவருடன் 5 வாகனங்கள் மட்டுமே வந்தது. மாநில போலீசாரின் வாகனங்கள் 6 வந்தது’’ என்றும் அவர் தெரிவித்தார்.