ஜெய்ப்பூர்

பா ஜ க தலைவர்களில் ஒருவரான அமித் ஷா பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் சட்டத்துக்கு உட்பட்டு ராமர் கோயில் கட்டப்படுவதையே தனது கட்சி விரும்புகிறது என ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்து உள்ளார்.

மூன்று நாள் பயணமாக ராஜஸ்தான் வந்துள்ள அமித் ஷா, ஜெய்ப்பூரில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டுள்ளார்.

அவர் தெரிவித்ததாவது :

”ராமர் கோயில் கட்டுவதைப் பற்றி எங்கள் கட்சி ஒரே முடிவில் தான் உள்ளது.  அது பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு ஏற்பட்டு சட்டவிதிகளின் படியே கோயில் கட்டப்படும்.  இதை நாங்கள் ஏற்கனவே எங்கள் கட்சியின் தேர்தல் அறிவிப்பிலும், பாராளுமன்றத்திலும் பலமுறை தெரிவித்ததுதான்.

எங்களைப் பொறுத்தவரை, சட்டசபை தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் ஒன்றாக நடத்துவதை விரும்புகிறோம்.   இது குறித்து அனைத்துக் கட்சிகளுடனும், கலந்தாலோசிக்க பிரதமரும், எங்கள் கட்சியும் தயாராக உள்ளது.

நாங்கள் என்றுமே ஜி எஸ் டி யை எப்போதுமே எதிர்த்தது இல்லை.  அது மாநிலங்களுக்கு எதிராக இருந்ததை மட்டுமே முன்பு எதிர்த்தோம்.  அனைத்து மாநிலங்களும், ஜி எஸ் டி மூலம் அவர்கள் அடையும் இழப்பை ஈடு செய்ய வேண்டும் என சொல்வதை எங்கள் அரசு முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது.  தற்போது அனைத்து மாநிலங்களும் ஜி எஸ் டி அமுல்படுத்தியதை ஆதரித்துள்ளது”  என கூறியுள்ளார்.