டில்லி,
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதான அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் வாதாடியதற்காக ரூ.3 கோடியே 42 லட்சம் ரூபாய் பில் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி.
கெஜ்ரிவால் மீது மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில், கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக ராம்ஜெத் மலானி ஆஜராகி வாதாடி வருகிறார்.
இந்த வழக்கின் விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கெஜ்ரி வாலுக்காக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆஜராகி வாதாடி வருகிறார். வழக்கு தற்போது குறுக்குவிசாரணை நிலையில் உள்ளது.
இதுவரை ஆஜராகி வாதிட்டதற்கு கட்டணமாக 3 கோடியே 42 லட்ச ரூபாய் தரவேண்டும் என கெஜ்ரிவாலுக்கு பில் அனுப்பியுள்ளார் ராம்ஜெத்மலானி.
இந்த வழக்கை நடத்துவதற்காக ஒருகோடி ரூபாயும், ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு 22 லட்ச ரூபாய் என கணக்கிட்டு பில் அனுப்பியுள்ளார். இதுவரை 11 முறை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ராம்ஜெத்மலானி ஆஜராகி உள்ளார்.
அதற்கான கட்டணம் மட்டுமே 2 கோடியே 42 லட்ச ரூபாய். ஆக மொத்தம் 3 கோடியே 42 லட்சம் ரூபாய் கட்டணம் விதித்து கள்ளார் ராம்ஜெத்மலானி.
கெஜ்ரிவால் முதல்வராக இருப்பதால், இந்த கட்டணத்தை டில்லி அரசின் நிதியிலிருந்து செலுத்த வேண்டும் என கோப்புகள் தயார் செய்யப்பட்டுள்ளது. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ராம்ஜெத்மலானி கூறும்போது, இந்த சர்ச்சைக்கு மூல காரணம் அருண்ஜேட்லி என்று குற்றம் சாட்டியுள்ளார்.