மும்பை

பேச்சு வார்த்தையால் பிரச்னை தீரும் என இம்ரான் கருதினால் அவர் ஏன் மூன்று திருமணங்கள் செய்துக் கொண்டார் என பிரபல திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மா கேட்டுள்ளார்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14 ஆம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலை ஒட்டி பல உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன.    அந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ் ஈ முகமது இயக்கத் தலைவன் மசூத் அசார் உலக பயங்கரவாதிகளில் பட்டியலில் சேர்க்க பல நாடுகள் ஐநாவை கேட்டுக் கொண்டுள்ளன.

கடந்த 19 ஆம் தேதி இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், “புல்வாமா தாக்குதலுக்காக பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ தாக்குதல் நடத்தினால் நாங்களும் பதிலடி கொடுப்போம்.    போரை துவங்குவது எளிது.   ஆனால் அந்தப் போரினால் நமக்கு என்ன நேரிடும் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்.   எந்த ஒரு பிரச்னையையும் பேச்சு வார்த்தையால் தீர்க்க முடியும்” என கூறி உள்ளார்.

பிரபல பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா ஏற்கனவே பல முறை தைரியமாக பல நிகழ்வுகளை விமர்சித்துள்ளார்.    தற்போது புல்வாமா தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்துக்கு தனது டிவிட்டரில் பதில் அளித்து தொடர் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.  இந்த பதிவுகளுக்கு 29000 பேருக்கு மேல் விருப்பம் தெரிவித்துள்ளனர்.  இதை 6500 பேர் மறு பதிவு செய்துள்ளனர்.

அவர் தனது பதிவுகளில்,

அன்புள்ள பிரதமர் இம்ரான் கான் அவர்களே, 

பேச்சு வார்த்தைகள் மூலம் பிரச்னைகள் தீரும் என்றால் நீங்கள் மூன்று முறை திருமணம் திருமணம் செய்துக் கொள்ள தேவை இருந்திருக்காது.

அன்புள்ள பிரதமர் இம்ரான் கான் அவர்களே

நம்மை நோக்கி டன் கணக்கில் ஆர்டிஎக்ஸ் எடுத்து வருபவரிடம் ஊமை இந்தியர்கள் எவ்வாறு பேச்சு நடத்த வேண்டும் என்பதை சொல்லிக் கொடுப்பீர்களா?   இதற்கான பயிற்சி கட்டணத்தை நிச்சயம் இந்தியர்களாகிய நாங்கள் செலுத்தி விடுகிறோம்

அன்புள்ள பிரதமர் இம்ரான் கான் அவர்களே

உங்கள் நாட்டில் ஒசாமா வசித்து வந்ததை அமெரிக்கா அறிந்துக் கொண்டு ஆனால் உங்கள் நாட்டில் யார் வசிக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியாமல் இருந்தால் நீங்கள் வசிப்பது உண்மையிலேயே நாடுதானா?   ஒரு ஊமை இந்தியனான நான் கேட்கிறேன்.  ஐயா.   எனக்கு இதை சொல்லிக் கொடுங்கள் இம்ரான் ஐயா’

அன்புள்ள பிரதமர் இம்ரான் கான் அவர்களே

எனக்கு யாரும் ஜெய்ஷ் ஈ முகமது, லஷ்கர் ஈ தொய்பா, தாலிபான் மற்றும் அல்கொய்தா ஆகியவை உங்கள் விளையாட்டு திடல் என்பதை சொல்லவில்லை.   ஆனால் நீங்கள் அந்த இயக்கங்கள் மீது மிகவும் அன்பு செலுத்துவதை என்றும் மறுத்ததில்லை இம்ரான் ஐயா

அன்புள்ள பிரதமர் இம்ரான் கான் அவர்களே

நீங்கள் ஜெய்ஷ் ஈ முகமது, லஷ்கர் ஈ தொய்பா, தாலிபான் மற்றும் அல்கொய்தா ஆகிய பந்துகளை பவுண்டரி தாண்டி இந்திய பெவிலியனுக்குள் அடித்துள்ளதாக கேள்விப்பட்டுளேன்.,   ஐயா தயவு செய்து கிரிக்கெட் பந்துகளும் வெடிகுண்டுகளா என்பதை சொல்லுங்கள்.   தயவு செய்து எங்களுக்கு சொல்லிக் கொடுங்கள் ஐயா

என தொடர் பதிவுகள் இட்டுள்ளார்.