சென்னை: தமிழகம் உள்பட 17 மாநிலங்களைச் சேர்ந்த 57 தொகுதிகளுக்கான ராஜ்ய சபா எம்.பி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவுபெறுகிறது.
இந்தியாவில் காலியாக ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 15 மாநிலங்களில் இந்த மாதத்துடன் காலியாகும் 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் காலியாகும் 6 இடங்களுக்கு தேர்தல் நடைபெறு கிறது. இதில், திமுக கூட்டணிக்கு 4 இடங்கள், அதிமுகவுக்கு 2 இடங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் ஏற்கனவே தொடங்கிய நிலையில், இன்றுடன் வேட்புமனுத் தாக்கல் முடிவடைகிறது. வேட்புமனு மீது நாளை பரிசீலனை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது ஜூன் 3ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஆகும்.
காலியாக உள்ள 6 இடங்களுக்கு 6க்கும் மேற்பட்டோர் மனுத்தாக்கல் செய்தால் ஜூன் 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். இல்லையேல், வேட்புமனுத் தாக்கல் செய்தோர் போட்டியின்றி தேர்வுபெறும் வாய்ப்பு உள்ளது. இதுவரை, திமுக – 3, அதிமுக – 2, காங்கிரஸ்- 1 என 6 பேர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
திமுக சார்பில் கிரிராஜன், ராஜேஷ்குமார், கல்யாணசுந்தரம் ஆகியோர் களமிறங்கியுள்ள நிலையில் காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும், தர்மரும் போட்டியிடுகின்றனர்.