சென்னை: தமிழ்நாட்டில் மாநிலங்களவை தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 6 பேர்  ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், அவர்கள் ஒருமனதாக வெற்றிபெறும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

தமிழ்நாட்டில் காலியாகும்  6 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. அதன்படி,  தற்போது ராஜ்யசபா எம்.பி.யாக உள்ள  தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, ம.தி.மு.க.வின் வைகோ, அ.தி.மு. க.வை சேர்ந்த சந்திரசேகரன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அந்த 6 மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2ம் தேதி தொடங்கியது. இன்றுடன் மனுதாக்கல் நிறைவடைகிறது. நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. வரும் 12-ந்தேதி மாலை வரை மனுக்களை திரும்பப் பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் போட்டியிருந்தால் வரும் 19-ந்தேதி தேர்தல் நடைபெறும்.

இந்த தேர்தலில்  தி.மு.க. சார்பில்  வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம்  மற்றும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஆகியோர் கடந்த 6-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். அதேபோல, அ.தி.மு.க. சார்பில் ஐ.எஸ்.இன்பதுரை, தனபால் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை வேறு யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை. இன்றும் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான சாத்தியகூறுகள் இல்லை.

இந்த நிலையில், இன்று வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்து வேட்புமனு பரிசீலனை நடைபெற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அப்போது வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.