சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், திமுக வேட்பாளர்கள் கனிமொழி சோமு, கே.ஆர்.என். ராஜேஸ்குமார் போட்டியின்றி தேர்வாகின்றனர். அவர்களை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யாததால், அவர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது.

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த கே.பி. முனுசாமி, வைத்தியலிங்கம் இருவரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்று எம்எல்ஏவாக தேர்வானதால், தங்களது மாநிலங்களவை எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்தனர். அந்த இடங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்தது. அதன்படி 2 இடங்களுக்கும் அக்டோபர் 4ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு செப்டம்பர்  15ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 22ந்தேதியுடன்  நிறைவடைந்தது. இந்ததேர்தலில், திமுக சார்பில், கனிமொழி சோமு, கே.ஆர்.என். ராஜேஸ்குமார்  ஆகியோர் போட்டியிட்டனர். இன்று வேட்புமனு பரிசீலனையின்போது, அவர்களை எதிர்த்து யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யாததால், அவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.  இதற்கான அதிகாரப்பூவ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.