சென்னை: மாநிலங்களவை தேர்தலில், அதிமுகவுக்கு பாஜக, பாமக ஆதரவு தெரிவித்து உள்ளது. இதனால், 2 மாநிலங்களை உறுப்பினர் பதவிகள் அதிமுகவுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் உளள 15 மாநிலங்களைச் சேர்ந்த 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான இடம் காலியாக உள்ளது. இதற்கான தேர்தல் ஜூன் 10-ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து தேர்தல் அட்டவனையும் வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி, மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் மே 24-ம் தேதி தொடங்கி, 31-ம் தேதியுடன் முடிவடையும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான ஆரம்ப நாள் மே 24-ம் தேதி. வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் மே 31-ம் தேதி என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜூன் 1-ம் தேதி. வேட்பு மனுக்களைப் பரிசீலனை செய்யப்படும் என்றும், வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்வதற்கான கடைசி நாள் ஜூன் 3-ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் வாக்குப்பதிவு ஜூன் 10-ம் தேதி நடைபெறுகிறது. வாக்குப் பதிவு நேரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை என அறிவிக்கப்பட்டு உள்ளது.
வாக்கு எண்ணிக்கை ஜூன் 10-ம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் நடவடிக்கைகள் முடிவுறும் நாள் ஜூன் 13-ம் தேதி என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு மாநிலங்களவையில் 18 பேருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. இதில், 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29ம் தேதி முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் 4 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அதில் 3 பேர் திமுக சார்பில் போட்டியிடு கின்றனர். ஒருவர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட உள்ளார். அதிமுக கூட்டணிக்கு இரு இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இதையடுத்து, மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரிப்பது என ஒரு மனதாக முடிவு செய்திருப்பதாக பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை அதிமுக நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு கோரிய நிலையில், ஜி.கே.மணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதுபோல, மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு அளிக்கிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதி அளித்த்துள்ளார். இதை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கமும் உறுதிப்படுத்தி உள்ளார்.