டில்லி

ணிப்பூர் விவகாரம் குறித்த எதிர்க்கட்சிகள் அமளியால் இன்று முழுவதும் மாநிலங்களவை  ஒத்தி வைக்கப்பட்டது.

பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரத்தில் விளக்கமளிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. அவை நடவடிக்கைகள் இதனால் முடங்கி வருகிறது. இன்றும் மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால் 7-வது நாளாக அவை நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கியது.

எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் எப்போது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்  என்று மக்களவையில் கேள்வி எழுப்பிய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். சபாநாயகர் ஓம் பிர்லா பல்வேறு கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, இது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து பதிவு செய்ததால் மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதைப் போல் மாநிலங்களவையில் மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்த போது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டெரிக் ஓ பிரையன் ஆவேசமாகப் பேசினார்.

மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் அவரது செயலுக்குக் கண்டனம் தெரிவித்து மாநிலங்களவையை நாள் முழுவதும் ஒத்தி வைத்தார். அவர் சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை காலை 11 மணிக்கு மாநிலங்களவை கூடும் என்ற தெரிவித்தார்.