வ.ர.மே. : 3 இன்னும் மூர்கமாகட்டும்…எதிர்ப்பு ! – நியோகி
அன்று, எம்.ஜி.ஆருக்கு வாய்த்த… ஆனால், இன்று ரஜினிக்கு வாய்க்காத ஒரு விஷயம் உண்டென்றால்…அது “மூர்கத்தனமான எதிர்ப்பு” !
எம்.ஜி.ஆரைப் பற்றி அவரது ஆதரவாளர்கள் – பக்தர்களிடம் சென்று கேட்டீர்களா னால்.. .“எம்ஜிஆரா…? அவர் “இம்” என்றால் எதுவும் நடக்கும் ! “உம்” என்றால் உலகம் சுருளும்…” என்றெல்லாம் ஏதோ கடவுள் ரேஞ்சுக்கு அவரைப் புகழ்வார்கள்.
அதனால், எம்.ஜி.ஆர் ஏதோ புஷ்பக விமானத்தில் ஏறி, புழுதி படாமல் பறந்து, அப்படியே கோட்டைக்குப் போய் இறங்கி விட்டார் என்றெல்லாம் எண்ணி விடக் கூடாது.
அவரைப் போல ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானவர்கள் தமிழக வரலாற்றில் வேறு யாருமே இல்லை எனலாம். ஆம், அன்று எம்ஜிஆர் அரசியலுக்கு வர முயன்ற போது…
”கலைஞர் கருணாநிதி” என்னும் “எல்லாம் அறிந்த” சக்தி பல வகைகளிலும் அவரை மூர்க்கமாக எதிர்த்தது. தன் பிள்ளையை எம் ஜி ஆரைப் போலவே திரையில் தோன்ற செய்து, எம்ஜிஆர் மன்றங்களை ஆங்காங்கே கலைக்கச் செய்து, தொழிலை முடக்கப் பார்த்தது. பட முதலாளிகளை பயமுறுத்தியது.
ஷூட்டிங் நடக்க விடாமல் மறைமுக தொல்லைகளை கொடுத்தது. கடனாளியாக்கப் பார்த்தது. இவைகளெல்லாம் போதாது என்று, தன் சொல் பேச்சுக் கேட்கும் படை பரிவாரங்களை அவருக்கு எதிராக இறக்கி விட்டு… மேடை தோறும் அவர் பெயரைக் கெடுக்கப் பார்த்தது.
டோப்பா தலையர் – சிட்டுக்குருவி லேகியம் தின்பவர் – தங்க பஸ்பம் சாப்பிடுபவர் – பொம்பளை சோக்காளி – மலையாளி – தயாரிப்பாளர்களை பிச்சை எடுக்க வைத்தவர் – சுயநலவாதி – ஆணவம் பிடித்தவர் – ஆண்மை இல்லாதவர்… இவ்வாறாக இன்னும் என்னென்னவோ அள்ளிக் கொட்டியது. அதை தவறென்றும் சொல்ல முடியாது. பதவி சார்ந்த, பாழும் அரசியலில் இவைகளெல்லாம் சகஜம் தான்.
ஆனால், எதற்கும் அசரவில்லை எம்ஜிஆர்.
ஒரு கட்டத்தில், “உலகம் சுற்றும் வாலிபன்” திரைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது, அவர் மேல் “ஃபெரா” சட்டம் பாய இருந்தது. அப்படிப் பாய்ந்தால்…மூன்று வருடம் சிறை என்று அச்சுறுத்தப்பட்டது !
ஹாங்காங்கில் ஷூட்டிங் எடுக்கப் போனவருக்கு பணத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஷூட்டிங்கை திட்டமிட்ட வகையில் முடிக்க வேண்டும் என்னும் நிலையில்…அங்கிருந்த பெரும்பணக்காரரான ராம் லீலா என்பவரிடம் சுமார் 6000 டாலர் கடனாகப் பணம் பெற்ற வகையில், சட்ட திட்டங்களைக் காட்டி அவர்மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படப் போகிறது என்று டெல்லியிலிருந்து தகவல் வர… பலவிதமான சமரசங்களை செய்ய வேண்டிய நிலமைக்கு ஆளானார்.
தொடர்ந்து விரட்டப்படுவதனால், எம்ஜிஆர் பயந்து போய் விடுவார் என்று எல்லோரும் எண்ணிக் கொண்டிருந்த போதுதான்…”நான் என்ன தவறு செய்தேன்..?” என்று துணிந்து மேடையேறிக் கேட்டார்.
அதற்குப் பிறகு வெளிப்படையாகவே டார்கெட் செய்யப்பட்டார். அழுகிய முட்டைகள் – தக்காளி களுக்கு டிமாண்ட் எகிறியது. அதிமுகவை துவங்கினார். அப்போது அவருக்கு வயது 55. இந்த வயதுக்கு மேல் என்ன செய்துவிடப் போகிறார் என்று எல்லோரும் ஏகடீயம் செய்தனர். தன் சக்திக்கு மீறி சுழல ஆரம்பித்தார்.
அப்போதுதான் அவர் திரைமறைவில் எவ்வளவு பேருக்கு எவ்வளவு உதவிகள் செய்து வாழ வைத்திருக்கிறார் என்பது வெளியே தெரிய ஆரம்பித்தது. மள மளவென ஆதரவுக் கரங்கள் நீள ஆரம்பித்தது. தான் ஒரு ராஜதந்திரி என்பதை நிரூபித்தார். முதலமைச்சர் ஆனார். ஆண்டு 1977.அப்போது அவருக்கு வயது 60.
இந்த சுருக்கமானப் பார்வையில்…
”எம்ஜிஆர் என்பவரின் மாபெரும் எழுச்சிக்குப் பின்னால் இருந்தது ; அவர் மீதான மூர்க்கமான எதிர்ப்பு…” என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த எதிர்ப்புதான் – அதை ஏற்றுக் கொள்ளாதவர்களை அவருக்கு “ஆதரவாக” பெற்றுத் தந்தது.
“நான் என்ன தவறு செய்தேன்…?” என்ற நெகிழ்ச்சியான கேள்விக்கு…
“உங்கள் மேல் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது…” என்னும் உறுதியான பதில், மக்களிடம் இருந்து திரும்பி வந்தது.
ஆனால், இன்றைக்கு…ரஜினிக்கு, அப்படிப்பட்ட எதிர்ப்பு என்று ஒன்றும் இல்லை. செல்லுமிட மெல்லாம் வரவேற்புதான் இருக்கிறது. இந்த வரவேற்பை வைத்துக் கொண்டு, எழுச்சி அரசியலின் முதல் பக்கத்தைக் கூட புரட்ட முடியாது.
என்ன செய்வது…?
வேறொரு சக்தி அரசியலில் இறங்கி, மக்களைக் கவர்ந்து விடுமோ என்று முதலில் கவலைப்பட வேண்டியது ஆளும்கட்சிதான். அதுவோ, “தயிர் சாதத்துக்கு ஊறுகாய் வெச்சுக்கலாமா…? இல்லை உப்புக் கருவாடே பெட்டரா…?” என்று யோசித்துக் கொண்டிருக்கிறது ! ஜெ.இருந்திருந்தால் இருந்திருக்கக் கூடிய எதிர்ப்பு சுத்தமாக இல்லவே இல்லை.
அதற்கு, உத்வேகம் கொடுக்கக் கூடியவர்கள் எல்லோரும் சிறையில் தள்ளப்பட்டு விட்டார்கள். சொல்லப் போனால்…ரஜினி என்றில்லை, யாரைப் பார்த்தாலும் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது ஆளுங்கட்சி.
எதிர்க்கட்சியோ….இன்னும் சுத்தம் ! அது, “கோயில் கல்யாணத்தில் சாப்பாடு டோக்கன் கொடுத்துவிட்டு, ஓட்டல் அட்ரஸ் சொல்லாமல் விட்ட கதையாய்…” மலங்க மலங்க அலைந்து கொண்டிருக்கிறது
மத்திய அரசோ, ரொமான்ஸ் லுக்கோடு துரத்திக் கொண்டிருக்கிறது
ஆகவே, அவருக்கான எதிர்ப்பு இங்கே எந்தப்பக்கத்திலும் இல்லை. இது சந்தோஷப்பட்டுக் கொள்ளக் கூடிய விஷயமல்ல. ஒரு அரசியல் எழுச்சிக்கு இது மிக , மிக வீக் பாயிண்ட் ஆகும் !
ஆகவே, அவருக்கான எதிர்ப்பையும் அவரே உருவாக்க வேண்டும் என்று உணர்ந்ததால் தான் “ராகவேந்திரா மண்டப ரசிகர் சந்திப்பும் – அரசியல் சீண்டல்களும்” அரங்கேற்றப்பட்டது.
அவர் எதிர்பார்க்கவில்லை என்று சொன்னாலும்… திட்டமிட்டது போல பலர் மிக மோசமான வசவுகளை ஆரம்பித்தனர். தங்கள் இருப்புக்கும், கனவுக்கும் ஆப்பு வைத்து விடுவாரோ என அஞ்சி வெடிக்க ஆரம்பித்தனர். குடும்பத்தை – சாதியை – மொழியை என சகலத்தையும் குறித்து சல்லித்தனமான மொழியில் தரையிறங்கி அடித்தனர்.
“ம்ம்….பேசட்டும், அப்படிப் பேசினால்தான் நாம் வளருவோம்…” என்று தன் ரசிகர்களைப் பார்த்து சொல்லி அனுப்பியிருக்கிறார்.
ஆனாலும் இது போதாது ! அவருக்கு இன்னும் எதிர்ப்பு எழ வேண்டும் ! அது, பலமடங்கு பெருக வேண்டும் ! ரஜினி ஏன் அரசியலுக்கு வரக்கூடாது என்பதற்கான காரணங்களை, அவரது எதிரிகள் மூர்கத்தனமாக முன் வைக்க வேண்டும். அதிலிருந்துதான் அவர் ஏன் அரசியலுக்கு வர வேண்டும் என்னும் மக்களாதரவு கிளர்ந்து எழும்.
இவைகளெல்லாம் நடக்க வேண்டுமென்றால் முதலில், ரஜினி அரசியலுக்கு வருவதாக பட்டவர்த்தனமாக சொல்ல வேண்டும். அவர் இன்னமும், தன் பட்டுக் கூட்டுக்குள் பதுங்கிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
அவருக்கும் – நாட்டுக்கும் ஓர் நல்ல தருணம் வாய்த்திருக்கிறது. அதை அவர் புறந்தள்ளி விடுவது புத்திசாலித்தனமாகாது. ஆட்சியை நல்ல திசையில் கொண்டு செலுத்த இங்கே திறமையுள்ள அதிகாரிகள் பலர் இருக்கிறார்கள். ஆனால், பெரும்பான்மையான மக்களை கன்சாலிடேட் செய்யும் சக்திதான் இங்கே இல்லை. அதாவது, பெரும்பான்மையான மக்களை நல்ல திசையை நோக்கி ஒருங்கிணைக்கும் ஒரு தலைமை இங்கே இல்லை !
அவ்வாறு, மக்களை கன்சாலிடேட் செய்யும் சக்தியும் – திறனும் தன்னிடமிருந்தும் கூட… ஒரு நல்ல நேரத்தில், ஒரு நல்ல நோக்கத்தை நோக்கி மக்களை கன்சாலிடேட் செய்யத் தவறுவாரேயானால்…
“நமக்கு எதற்கு வம்பு…?” எனக் கடந்து போவாரானால்….அவர் பின்பற்றும் ஆன்மீகத்துக்கு என்ன பெருமை !?
சினிமாவில் சாதிக்க இன்னும் என்னதான் இருக்கிறது…? பாகுபலி போன்று பெரும் உடலுழைப்பைக் கோரும் க்ராஃபிக்ஸ் நிறைந்த சினிமாக்கள் தலையெடுத்து வரப் போகும் காலத்தில் ரஜினியின் பர்ஃபார்மன்ஸுக்கு என்ன வேலை இருக்கிறது…?
சினிமாவுக்காக இன்னமும் உழைப்பைக் கொடுப்பதில் என்ன ஆத்ம திருப்தி ஏற்பட்டுவிடப் போகிறது…?
ரஜினியின் படம்தான் இன்னமும் வியாபாரத்தில் முன்னணியில் இருக்கிறது ! வெற்றி நிச்சயம் என்ற நிலையில் ஒரே போரை மீண்டும் – மீண்டும் தொடுப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது…?
ராகவேந்திரா மண்டபத்தில் தன் ரசிகர்களிடம் பேசும் போது….அவர் சொன்ன “போர்”… இனி, ஜனநாயகத் தேர்தல் போராகவே இருக்கட்டும் !
ரஜினி அரசியலில் இறங்கிவிடக் கூடாது என பிரார்த்தனை செய்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள்…
எம்.ஜி.ஆராவது தன் 55 வயதில் கட்சி துவங்கினார். ஆனால் அதைவிட, 12 வயது அதிகமான நிலையில் தன் 67 ஆவது வயதில் ரஜினி கட்சி ஆரம்பித்தால்… எம்ஜியாரைப் போல நாடு முழுவதும் சுற்றிவர முடியுமா..? உடல் நிலை ஒத்துழைக்குமா….? எனக் கேட்கிறார்கள் !
மேம்போக்கான இந்தக் கேள்வியில், ஆழமும் இல்லை – அர்த்தமும் இல்லை ! காலம் சுருங்கிக் கொண்டிருக்கிறது. பரந்த உலகம் க்ளோபல் வில்லேஜ் என்றாகி விட்டது.
உலக நாடுகளின் சாட்டிலைட்டுகள் எல்லாம் கூடி இந்தப் பூமியை “ஜூம் டவுன்” செய்து கொண்டிருக்கும் இந்தக் காலக் கட்டத்தில் இந்தக் கேள்வி எடுபடாது !
1949 ல் திமுகவை துவங்கிய அண்ணாவுக்கு ஆட்சி பீடமேற 18 ஆண்டுகள் பிடித்தது. ஆனால், 1972 ல் அதிமுகவை துவங்கிய எம்.ஜி.ஆருக்கு அரியணை காண ஐந்தே ஆண்டுகள் போதுமானதாக இருந்தது.
ஃபேஸ்புக் – ட்வீட்டர் – போர்ட்டல்கள் – டஜன் சேனல்கள் – என சோஷியல் மீடியாக்கள் மலிந்துவிட்ட இப்போதைய உலகில்…இருந்த இடத்திலிருந்து கொண்டே ஏதேதோ சாதித்து விட முடியும்.
அன்று ஒரு ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நாடு முழுவது பற்றிக் கொள்ளப் பல மாதங்கள் தேவைப்பட்டன. ஆனால், இன்றைய ஜல்லிக்கட்டுப் போராட்டம், மெரீனாவில் இருந்து கொண்டு…வெறும் நாற்பத்தெட்டு மணி நேரத்தில்…உலகத்தையே கலங்கடித்து விடவில்லையா….?
பழுத்து நிற்கும் காலம் – பளிச்சென்ற நோக்கம் – பாமர மக்களின் பக்கபலம் – அர்ப்பணிப்பு மற்றும் அணுகும் விதம் !
போதும் !
மற்றவைகள் தானாக நடந்தேறி விடும் !
( தொடரும்…