வரலாற்றில் சில திருத்தங்கள் – தொடர் – லெமூரியாவும் குமரிக் கண்டமும்

Must read

வரலாற்றில் சில திருத்தங்கள் – தொடர் – லெமூரியாவும் குமரிக் கண்டமும்

அத்தியாயம்: 10                                    இரா.மன்னர்மன்னன்

மிழகத்தின் தொன்மையான வரலாறு குறித்து பேசக்கூடிய, எழுதக் கூடிய நபர்கள் அனைவருமே லெமூரியா – என்ற வார்த்தையை வாழ்வில் ஒருமுறையாவது கடந்து இருப்பார்கள். சிலப்பதிகாரத்தைப் பற்றி வகுப்பெடுத்த தமிழ் ஆசிரியர்கள் பலர், மாணவர்களுக்கு லெமூரியா என்ற பிம்பத்தை ஒருமுறையாவது உருவாக்கியவர்களாக இருக்கிறார்கள். தமிழர்கள் அறிந்தவரையில் லெமூரியா என்பது தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்து, பின்னர் கடல் கோளினால் மறைந்து போன ஒரு நிலப்பரப்பு. இதற்கான ஆதாரங்கள் நமது இலக்கியங்களில் ‘குமரிக் கண்டம்’ என்ற அழிந்த தமிழகப் பகுதியைப் பற்றிக் கிடைக்கும் குறிப்புகள். குமரிக் கண்டமே லெமூரியா கண்டம் என்பதே லெமூரியா பற்றி இன்று உள்ள பொதுவான புரிதல்.

‘பன்மொழிப் புலவர்’ என்று அழைக்கப்பட்ட கா.அப்பாதுரை அவர்கள் கி.பி.1941ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட தனது நூலுக்கு ‘இலெமூரியா அல்லது குமரிக்கண்டம்’ என்று பெயரிட்டார். அவரது புரிதலே இன்றைக்கும் தமிழர்களின் பொதுவான புரிதல். அது சரி,. லெமூரியா – குமரிக் கண்டம் இரண்டும் ஒன்றுதானா?

முதலில் குமரிக் கண்டம் என்ற கருத்தைப் பற்றிப் பார்ப்போம். தமிழ் இலக்கியங்களின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் பாண்டிய அரசனைப் பற்றி

பஃருளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து

குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள

வடதிசை கங்கையும் இமயமும் கொண்டு

தென்திசை ஆண்ட தென்னவன் வாழி – என்று குறிக்கப்பட்டு உள்ளது.

இதன் பொருள் ’முன்பு உன்னுடைய ஆட்சியின் கீழ் இருந்த பஃருளி என்ற ஆற்றையும், குமரி என்ற மலைத் தொடரையும் கடல் கொண்டுவிட அப்போதும் மனம் தளராமல் வடக்கே இருந்த கங்கை ஆற்றையும் இமய மலை யையும் எல்லையாகக் கொள்ளும் அளவுக்கு ஆட்சிப் பரப்பை அதிகரித்து ஆண்ட பாண்டியனே நீ வாழ்க’ என்பதாகும். இந்தப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள பஃருளி ஆறும் குமரி மலைத் தொடரும் எங்கே இருந்தன என்று நாம் தேடும் போது, சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் தனது உரையிலே கடல் கொண்ட தமிழர் பகுதி பற்றிய வேறு பல புதிய தகவல்களை நமக்குத் தருகின்றார்.

பஃருளி என்ற ஆற்றுடன் குமரி என்ற ஆறும் கடல் கொண்ட தமிழகத்தில் இருந்ததாகவும், இரண்டு ஆறுகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் 49 நாடுகள் இருந்ததாகவும் அவர் கூறுகிறார். அந்த நாடுகளின் பெயர்களாக ஏழு கங்கை நாடு, ஏழு மதுரை நாடு, ஏழு முன்பாலை நாடு, ஏழு பின்பாலை நாடு, ஏழு குறும்பனை நாடு, ஏழு குள்ள நாடு, ஏழு குனக்கரை நாடு என்பனவற்றை அடியார்க்கு நல்லார் காட்டுகின்றார்.

சிலப்பதிகாரத்தைத் தவிர தமிழர் நிலம் கடல் கொண்ட செய்தி கலித் தொகையிலும் காணப்படுகின்றது.

மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வெளவலின்  மெலிவின்றி மேற்சென்று மேவார்நாடு இடம்பட புலியொடு வில்நீக்கி புகழ்பொறித்த கிளர்கெண்டை  வலியினால் வனக்கிய வாடாசீர்த் தென்னவன் – என்றுபாண்டியர்களைக் கலித்தொகை போற்று கின்றது.

இதன் பொருள்: ‘தனது மண்ணை கடல் கொள்ள, பாண்டிய அரசன் சோழர் மற்றும் சேரரை வென்று அவர்களது புலி, வில் சின்னங்களை நீக்கி, ’கெண்டை மீன்’ ஆகிய தனது சின்னத்தை அவர்களின் ஆட்சிப் பகுதியில் நாட்டினான். (அதாவது அவர்களின் ஆட்சிப்பரப்பைத் தனதாக்கிக் கொண்டான்)’ – என்பது ஆகும். சிலப்பதிகாரம், கலித்தொகை ஆகியவற்றைத் தவிரவும் தமிழகத்தில் இரண்டு முறைகள் கடல்கோள்கள் நடந்து, அவற்றால் முதல் இரண்டு தமிழ்ச் சங்கங்கள் அழிந்தன என்ற குறிப்பு இறையனார் அகப்பொருள் என்ற இலக்கண நூலிலும் கூறப்பட்டு உள்ளது.

இவ்வாறாக தமிழர்கள் கடல் கோளால் இழந்த பகுதியை ‘குமரிக் கண்டம்’ என்று தமிழக வரலாற்று ஆய்வாளர்கள் அழைத்தனர். இந்தக் குமரிக் கண்டம் தமிழகத்தின் தெற்குப் பகுதியில் பெரும்பான்மையாக விரவி இருந்தது என்பது ஆய்வாளர்களின் எண்ணம் ஆகும். தேவநேயப் பாவாணர், அப்பாதுரையார் ஆகியோர் இந்தக் கருத்தை ஆழமாக நம்பினர். குமரிக் கண்டம் தமிழகத்தின் தென்பகுதியா? வேறுபகுதியா? – என்ற கேள்வியைத் தற்கால வரலாற்று ஆசிரியர்கள் சிலர் எழுப்புகின்றனர். பா.பிரபாகரன் எழுதியுள்ள ’குமரிக் கண்டமா? சுமேரியமா? தமிழர்களின் தோற்றமும் பரவலும்’ நூல் இது குறித்த பல விவாதங்களை முன்வைக்கின்றது. ஆனால் குமரிக் கண்டம் என்ற ஒன்று இருந்தது என்பதை யாரும் முழுவதுமாக மறுக்கவில்லை. தமிழகம் கடல்கோளால் இழந்த ஒரு பகுதியே குமரிக் கண்டம் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

அடுத்து நாம் பார்க்க வேண்டியது லெமூரியா கண்டத்தை. லெமூரியா என்ற சொல் தமிழ்ச்சொல் அல்ல, சிலர் அதீத மொழி ஆர்வத்தின் காரணமாக லெமூரியா கண்டம் என்பதை ‘இலைமுறிந்த கண்டம்’ என்றெல்லாம் எழுதுகின்றார்கள். அது தேவையற்றது. லெமூரியா என்பதன் வேர்ச்சொல் லெமூர் என்ற ஒருவகைக் குரங்கில் இருந்து பிறக்கின்றது.

இந்த லெமூர் குரங்குகளின் சுத்தமான வகைகள் இன்று ஆப்ரிகாவிற்கு அருகே உள்ள மடகாஸ்கர் தீவில் மட்டுமே காணப்படுகின்றன. உலகில் வேறு எங்கும் இதன் சுத்தமான 11 வகைகளில் ஒன்றுகூட கிடையாது. இதன் கிளையினங்களாகக் கருதப்படுபவை மட்டுமே உலகின் பிற நாடுகளில் காணப்படுகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த லெமூர்களின் ஒரு வகையான ’லெமூர் புல்வஸ்(Eulemur Fulvus)’ன் படிவங்கள் மடகாஸ்கரில் காணப்படுகின்றன. இந்தப் படிவங்களும் உலகின் வேறு இடத்தில் கிடைக்க வாய்ப்பில்லை என்று கருதப்பட்ட நிலையில், அதே வகை லெமூரின் படிவங்கள் கி.பி.1800களில் தமிழகத்தின் நீலகிரி மலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது அதிசயிக்கத்தக்க வகையில் கிடைத்தன. பிலிப் ஷ்லாட்டர் என்ற விலங்கியல் ஆராய்ச்சியாளர் கி.பி.1864ஆம் ஆண்டில் தனது ‘மடாகாஸ்கர் பாலூட்டிகள்’ என்ற கட்டுரையில் இந்தக் கண்டுபிடிப்பைப் பதிவு செய்தார்.

மடகாஸ்கருக்கு 100 மைல் தொலைவில் உள்ள ஆப்ரிக்காவிற்குப் பரவாத லெமூர் குரங்கு, மடகாஸ்கருக்கு 5,000 மைல் தொலைவில் உள்ள நீலகிரியில் வாழ்ந்தது எப்படி? – என்ற கேள்வியை தனக்குத் தானே முன்வைத்த ஷ்லாட்டர் ‘லெமூர் குரங்குகள் மடகாஸ்கரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வர, இடையே இரண்டு பகுதிகளையும் இணைக்கும் அளவிற்கு ஒரு பெரிய நிலப்பரப்பு இருந்திருக்க வேண்டும். பின்னர் அது கடலில் மூழ்கி இருக்க வேண்டும்’ என்ற பதிலுக்கு வந்தார். இவ்வாறாக நீலகிரிக்கும் மடகாஸ்கருக்கும் இடையே லெமூர்கள் வாழ்ந்ததாகத் தான் கருதிய பகுதிக்கு ஷ்லாட்டர் வைத்த பெயரே லெமூரியா என்பது. எர்னஸ்ட் ஹேக்கெல் என்ற ஜெர்மானிய ஆய்வாளர் இப்படி ஒரு நிலப்பகுதி இருக்க சாத்தியமுள்ளதாக ஏற்கனவே சொல்லிக் கொண்டிருந்த நிலையில் ஷ்லாட்டர் கூறிய லெமூரியா கருத்து இன்னும் வலுவாக அந்த சிந்தனையை ஊன்றியது.

கி.பி.1904ஆம் ஆண்டில் கனகசபை என்ற தமிழறிஞர் கடல்கொண்ட குமரியைப் பற்றி எழுதினார். கி.பி.1906ஆம் ஆண்டில் இலங்கையில் இருந்து வெளிவந்த சித்தாந்த தீபிகை இதழின் ஆசிரியர் நல்லசிவம் பிள்ளை தனது கட்டுரையில் ‘கனகசபை கூறிய கடல்கொண்ட குமரியே ஷ்லாட்டர் காட்டும் லெமூரியா’ என்று எழுதினார். அதுவரை குமரிக் கண்டம் குறித்து எந்த ஆய்வும் வெளியாகாத நிலையில் தமிழ் கூறும் நல்லுலகம் அவரது கூற்றை அப்படியே ஏற்றுக் கொண்டது. ’குமரிக் கண்டமே லெமூரியா’ – என்ற கருத்து பரவத் துவங்கியது.

அதே காலகட்டத்தில் சென்னை அடையாற்றில் அமைந்திருந்த தியாசபிகல் சொசைட்டியின் (பிரம்ம ஞான சபை என்பது வேறு பெயர்) மேடம் பிளவட்ஸ்கி ‘ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பல மகான்கள் மனித குலத்தை வழிநடத்தும் பொருட்டுத் எனக்குப் பல தகவல்களைத் தந்துகொண்டிருக்கின்றனர். அந்த மனிதர்கள் வாழும் இடம் லெமூரியா’ என்றார். இது லெமூரியா என்ற கருத்தை அறிவியலாளர்கள், மொழி சிந்தனையாளர்கள் ஆகியோரைத் தாண்டி மத நம்பிக்கை உடையவர்களிடமும் கொண்டு சேர்த்தது.

லெமூரியா குறித்து பல புத்தகங்கள் எழுதப்பட்டன. அவை பெரும்பாலும் லெமூரியாவும் குமரிக் கண்டமும் ஒன்று என்றே கூறின. (கா.அப்பாதுரை எழுதிய புத்தகம் பற்றி முன்னரே குறிப்பிட்டோம்). இப்படியாக குமரிக் கண்டமும் லெமூரியாவும் பலவாறாக ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தப்பட்டன. இங்கே நாம் அறிய வேண்டியது அடிப்படையில் குமரிக் கண்டமும் லெமூரியாவும் ஒன்று அல்ல என்பதைத்தான்!.

குமரிக் கண்டம் என்ற கருத்து தமிழ் ஆய்வில் பிறந்த ஒன்று, ஷ்லாட்டர் கூறிய லெமூரியா என்ற கருத்தோ விலங்கியல் ஆய்வில் பிறந்தது. லெமூரியா என்ற ஒரு மிகப்பெரிய பரப்பு இருந்தது என்றால் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டியது அறிவியல் மற்றும் புவி வரலாற்றின் ஒரு பகுதியான ’புவியியல் துறை’ ஆனால் அது ஷ்லாட்டரின் கருத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை..

கடலின் உள்ளாக 5,000 மைல்கள் நீளம் உள்ள ஒரு நிலப்பரப்பு மூழ்க புவியியல் ரீதியாக வாய்ப்பில்லை என்பதோடு, ஒரு குரங்கை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு மாபெரும் மாற்றத்தை அளவிட முடியாது என்பதே புவியியலாளர்கள் லெமூரியா என்ற கருத்தை மறுத்ததற்குக் காரணம். லெமூர் விவகாரத்தில் லெமூரியா என்ற கண்டத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டால், தென் அமெரிக்காவிலும் ஆப்ரிக்காவிலும் ஒரே மாதிரியான தாவரங்கள் காணப்படுவதால் அவற்றுக்கு இடையிலும் ஒரு பழைய பகுதி இருந்ததாக ஆய்வாளர்கள் ஏற்கவேண்டும் அதுவும் சாத்தியமற்றது.

சரி, அப்போது லெமூர் குரங்கு எப்படி 5,000 மைல் கடலைத் தாண்டி வந்தது?. இப்போது ராமாயணத்தைப் பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டாம். இந்தக் கேள்விக்கான பதில் மிகவும் எளிமையானது.

கி.பி.1915ஆம் ஆண்டில் ஜெர்மானிய விஞ்ஞானியான ஆல்ஃப்ரெட் வெகெர்னர் புவியியலுக்கு ஒரு புதிய கொள்கையை வெளியிட்டார். ’உலகம் முழுவதும் உள்ள நிலப்பரப்புகள் எல்லாம் ஒருகாலத்தில் ஒன்றாக இணைந்த அமைப்பாக இருந்தன’ – என்பதே அவரது கொள்கையின் அடிநாதம். அந்த அமைப்பிற்கு ’பாஞ்ஜியா’ என்று அவர் பெயர் வைத்தார். ’பாஞ்ஜியாவானது டைனோசர்கள் வாழ்ந்த ஜுராசிக் காலத்தில் இரண்டாகப் பிளவுற்றது. அதன் ஒரு பகுதி லாரேசியா, மறு பகுதி கோண்டுவானா. பின்னர் கிறிஸ்தேசியன் காலத்தில் இந்த இரண்டு பெரும் நிலப்பரப்புகளும் உடைந்து 14 புவித்தட்டுகளாக மாறின’ – என்பதே வெகெர்னரின் கொள்கை.

வெகெர்னரின் கொள்கைக்கு இன்றைய உலக வரைபடமே சான்று கூறுகின்றது. உலக வரைபடத்தில் உள்ள தென் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையையும், ஆப்ரிக்காவின் மேற்குக் கடற்கரையையும் பாருங்கள்.  இவை ஒன்றுடன் ஒன்று சரியாகப் பொருந்தும். ஏனெனில் இவை முன்பு ஒரே நிலப்பரப்பாக இருந்து பின்னர் பிரிந்தவை. இரண்டு பகுதியிலும் தாவரங்கள் ஒன்றாக இருப்பது இதனால்தான்.

இதைப்போலவே 64 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா ஆப்ரிக்காவுடன் இணைந்து இருந்தது, அப்போது இரண்டுக்கும் நடுவில் மடகாஸ்கர் இருந்தது. அப்போதே (64 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே) ஆப்ரிக்கா இந்தியாவிடம் இருந்து பிரிந்து, நகர்ந்து தனிக் கண்டமானது. பிறகு 30-40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்தான் மடகாஸ்கர் இந்தியாவிடம் இருந்து உடைத்துக் கொண்டது. ஆப்ரிக்கா பயணித்த திசையில் தானும் பயணித்தது. இந்தியா எதிர்திசையில் பயணித்து ஆசிய கண்டத்தின் மீது மோதி, அத்தோடு தன்னை இணைத்துக் கொண்டது. இந்த மோதலால் தோன்றியதே இமயமலை. இதனால்தான் மடகாஸ்கரிலும் நீலகிரியிலும் உள்ள தாவரங்கள், விலங்குகள் ஒன்றாக உள்ளன – என்கிறார் வெகெர்னர்.

இன்றைய நவீன புவியியல் துறையானது வெகெர்னரின் கூற்றுகளை ஏற்றுக் கொண்டுள்ளது. உலகம் ஒரு காலத்தில் ஒரே நிலமாக இருந்தது என்பதும், புவியில் 14 தட்டுகள் உள்ளன என்பதும் இன்றைய புவியியலின் அடிப்படைகளாக உள்ளன. இதனை நாம் மறுக்க முடியாது. இந்தப் புதிய கொள்கையானது லெமூரியா என்ற கருத்துக்கு ஒரேயடியாக முற்றுப்புள்ளியை வைத்தது விட்டது.

எனவே நண்பர்களே லெமூரியா என்பது பழைய ஐரோப்பியக் கருத்து என்பதோடு, அது இன்றைய நவீன அறிவியலுக்கு முரணானதாகவும் ஆகிவிட்டது, இந்தக் கருத்தோடு தமிழர் தொலைத்த நிலமான குமரிக் கண்டத்தை நாம் தொடர்புபடுத்துவது சரியானதாக இருக்க முடியாது.

’5000 மைல் நீளப் பரப்பு கடலில் மூழ்குவது கடினம்’ என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனாலும் தமிழக ஆய்வாளர்கள் லெமூரியா என்றக் கருத்தைக்  கேட்டதும் ஏற்றதன் காரணம் குமரிக் கண்டத்தின் பிரம்மாண்டம் குறித்து அவர்களுக்குள் இருந்த கற்பனை. ’பஃருளி ஆற்றுக்கும் குமரி ஆற்றுக்கும் இடையே 49 நாடுகள் இருந்ததன’ – என்று அடியார்க்கு நல்லார் கூறியதில் இருந்து குமரிக்கண்டம் என்ற நிலப்பரப்பு ஒரு கண்டத்தின் அளவை ஒத்ததாக இருக்கலாம் என்றே தமிழக ஆய்வாளர்கள் கருதினர். இதனாலேயே ’மிகப்பெரிய பரப்பைத் தமிழர்கள் இழந்து விட்டனர்’ – என்ற கருத்து நம்மிடையே வேரூன்றிவிட்டது. கடல்கொண்ட தமிழ் நிலம் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியே என்பதை நாம் இங்கே மறந்துவிடக் கூடாது. மேலும் ’49 நாடுகள்’ என்று அடியார்க்கு நல்லார் கூறுவதை இன்றைய நாடுகளின் அளவை மனதில் கொண்டு நாம் பார்க்கக் கூடாது. பல்லவர்கள் ஆண்ட தொண்டை மண்டலத்தில் மட்டும் முற்காலத்தில் 80 நாடுகள் இருந்தன என்பதை இங்கே நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

எனவே குமரிக் கண்டமும் லெமூரியாவும் ஒருபோதும் ஒன்றல்ல….

 

More articles

Latest article