டெல்லி: ராஜீவ் கொலைவழக்கு கைதிகள் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் முடிவு எடுக்காமல் இழுத்தடித்து வரும் நிலையில், இதுகுறித்து, குடியரசுத் தலைவருக்கு மதுரை எம்.பி. வெங்கடேசன் கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில்,  குடியரசு மாளிகையில் இருந்து பதில் அனுப்பப்பட்டு உள்ளது.

மறைந்தமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 29 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த தீர்மானம்அனுப்பி இரு ஆண்டுகள் கடந்த நிலையில், ஆளுநர் இன்னும் முடிவு அறிவிக்காமல் இருந்து வருகிறார்.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையை அடுத்து,  ஆளுநரின்  தாமதத்துக்கு அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம், விரைந்து முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

இதையடுத்து, 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குடியரசுத் தலைவருக்கு நவம்பர் 5ம் தேதி கடிதம் எழுதினார். அதில், இந்திய சட்ட அமைப்பின்படி வாழ்நாள் சிறை என்பதன் காலம் வரையறுக்கப்படவில்லை என்றாலும் பொதுவாக 14 வருடங்கள் என்பது ஒரு நியதியாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அப்படிப் பார்த்தால் இந்த எழுவரும் இரண்டு வாழ்நாள் தண்டனைகளுக்கும் மேலாகவே அனுபவித்தும் தொடர்ந்து சிறையில் இருக்கின்றனர் எனக் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களையும் சுட்டிகாட்டியதுடன்,  இனியும் தாமதிக்காமல் உடனடியாக முடிவெடுத்து எழுவரையும் விடுதலை செய்ய ஆளுநருக்குப் பரிந்துரைக்க வேண்டும். அந்த எழுவரும் மிக மிக அதிகமான தண்டனையை ஏற்கனவே அனுபவித்து விட்டார்கள் என்கிற அடிப்படையில் இந்த விடுதலையை வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த கடிதத்திற்கு குடியரசத் தலைவர் மாளிகையில் இருந்து பதில் அனுப்பப்பட்டுஉள்ளது. அதில், “உங்கள் கடிதத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி உள் துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அந்த கடித்தை  குடியரசுத் தலைவரின் இணைச் செயலாளர் அஜய் படோ அனுப்பி உள்ளார்.