டில்லி.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 20ம் தேதி, ‘சத்பாவனா திவஸ்’ என்ற பெயரில், தேசிய ஒருமைபாடு மற்றும் சமூக நல்லிணக்க தினம் நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தபிறகு, அந்த நிகழ்ச்சியில் இருந்து ராஜீவ்காந்தி பெயர் நீக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வரும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் சமூக நல்லிணக்க தினத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ் பெயர் நீக்கப்பட்டதற்கு பாராளுமன்றத்தில் காங்., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராஜ்யசபா கேள்வி நேரத்தின் போது காங்., எம்.பி., சாயா வர்மா கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, அரசின் திட்டங்களுக்கு பா.ஜ.,வுடன் தொடர்புடையவர்களின் பெயர்கள் நேரிடை யாகவோ, மறைமுகமாகவோ சூட்டப்படுவதாக ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆஸாத் குற்றம் சாட்டினார்.
அவரை தொடர்ந்து பேசிய காங்., மூத்த தலைவர், ஆனந்த் சர்மா பேசியதாவது: முன்னாள் பிரதமர் ராஜிவின் பிறந்த தினமான, ஆகஸ்ட் 20ம் தேதி, ஒவ்வொரு ஆண்டும், ‘சத்பாவனா திவஸ்’ என்ற பெயரில், தேசிய ஒருமைபாடு மற்றும் சமூக நல்லிணக்க தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது;
ஆனால், இரண்டு ஆண்டுகளாக, இந்த தினத்துடன் இணைந்து இருந்த ராஜிவ் பெயர், திட்டமிட்டு நீக்கப்பட்டு உள்ளது; மத்திய அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதிலளித்த பார்லி., விவகாரங்கள் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவிக்கையில்,
நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்களை ஒதுக்கி விட முடியாது. நாட்டின் இயற்கை வளங்களும், அரசு சொத்துகளும் ஒரு குடும்பத்துக்கும், ஒரு கட்சிக்கும் மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பம். அதற்கு வாய்ப்பே இல்லை. உங்கள் விருப்பம் அதுதான் எனில் பிரதமர் மோடியின் ஆட்சியில் அதற்கு சாத்தியமில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.