சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், சின்னமலையில் உள்ள ராஜீவ்காந்தி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

பாரத ரத்னா அமரர் ராஜீவ் காந்தி அவர்களது பிறந்த தினமான இன்று 20.08.2025 நாடு முழுவதும் காங்கிரசாரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது நினைவை போற்றும் வகையில், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் பொதுக்கூட்டங்களும் நடைபெறுகின்றன.
அமரர் ராஜீவ்காந்தியின் பிறந்த நாளையொட்டி, டெல்லியில் உள்ள வீர் சக்ரா நினைவிடத்தில், காங்கிரஸ் தலைவர் கார்கே உள்பட பலரும், ராஜீவ் காந்தியின் மகளும், வயநாடு எம்.பி.யுமான பிரியங்கா காந்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அதுபோல, பீகாரில் யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, அங்கு ராஜீவ் உருவபடத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிலையில், ராஜீவ்காந்தியின் பிறந்தநாளையொட்டி, சென்னை சின்னமலையில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநில தலைவர் செல்வபெருந்தகை, துணைத்தலைவர் வாழப்பாடி இராம.சுகந்தன் உள்பட நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் சாய்ராம், முத்தலாக், அட்வகேட்எம்.ஏ.செல்வகுமார், பி.ஜி.செல்வகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.