திருப்பத்தூர்: ராஜீவ்கொலை வழக்கு கைதியான, பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தமிழகத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்டங்கள் தோறும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து, காத்திருந்து தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர்.
இநத் நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதியான பேரறிவாளன், தற்போது திருப்பத்தூர் அருகே உள்ள தனது சொந்த ஊருக்கு பரோலில் வந்துள்ளார். தினமும் காலை 10 மணிக்கு ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட்டு வருகிறார். அவருக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என அவரது அம்மா அற்புதம்மாள் கோரிக்கை வைத்திருந்தார்.
இதையடுத்து, இன்று காலை பணியிடை பயிற்சி டிஎஸ்பி வெங்கடகிருஷ்ணன் தலைமையில், ஆயுதப்படை ஆய்வாளர் பாபு உள்ளிட்ட 6 போலீஸாரின் பாதுகாப்புடன் பேரறிவாளன், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அழைத்து வரப்பட்டார். அங்குள்ள கூட்டரங்கில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி மையத்தில் பேரறிவாளனுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர் அவர் பாதுகாப்புடன் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.