சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த அதிமுக ஆட்சியின்போது, அமைச்சரவை கொண்டு வந்த தீர்மானம் மற்றும் ஆவணங்களை தமிழக ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளார் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்து உள்ளது. அதுதொடர்பான ஆவனங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 7 கைதிகளும் கடந்த 30 ஆண்டுகளைக் கடந்தும் சிறையில் வாடி வருகின்றனர். இதில் பேரறிவாளனுக்கு உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்கிய நிலையில், நளினி, ரவிச்சந்திரன் பரோலில் இருந்துவருகின்றனர்.
முன்னதாக, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக முந்தைய அதிமுக அரசு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் இருந்ததால், ஆளுநரின் செயல்பாடு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும் கைதிகளில் நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, “ஆளுநருக்கு எதிராக உத்தரவிடும்படி கோர முடியாது என்று கூறிய நீதிமன்றம், ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் ஆயுள் கைதியை எப்படி முன்கூட்டியே விடுதலை செய்ய முடியும் என்றும் கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, அமைச்சரவைத் தீர்மானத்தின் மீது முடிவெடுக்க வேண்டியது ஆளுநர்தான் எனவும் தெரிவித்தார்.
மேலும் ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரையும், முன்கூட்டியே விடுதலை செய்ய நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், பேரறிவாளன் விவகாரம் மட்டும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டதா அல்லது 7 பேரின் வழக்கும் அனுப்பப்பட்டுள்ளதா?” என விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், பேரறிவாளன் மட்டு மல்லாமல் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான ஆவணங்களையும் ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, நளினி தரப்பு வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான விவகாரத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரமில்லை எனத் தெரிவித்தார்.
எந்த தேதியில் ஆளுநர், இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் என்பது உள்ளிட்ட விவரங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.