சென்னை: சொத்து வரிக்கு எதிராக நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த நிலையில், ரஜினிகாந்த் அனுபவமே பாடம் என புலம்பி டிவிட் பதிவிட்டுள்ளார். மேலும் ரஜினி கடந்த 2018ம் ஆண்டு முதலே சொத்து வரி செலுத்தவில்லை என்றும், மொத்தம் 13 அளவில் பாக்கி உள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம் கோடம்பாக்கத்தில் உள்ளது. இங்கு கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டு காலத்துக்கு 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சொத்து வரி செலுத்தும் படி, சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீஸை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டார்.
அவர்து மனுவில், கடந்த பிப்ரவரி 14 -ஆம் தேதி சொத்துவரி செலுத்தியதாகவும், கொரோனா தொற்று பேரிடர் காரணமாக, மத்திய – மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்ததால், திருமண மண்டபம் யாருக்கும் வாடகைக்கு விடப்படவில்லை. மார்ச் 24-ம் தேதிக்குப் பிறகு அனைத்து திருமணங்களும் ரத்து செய்யப்பட்டு, முன்பணமாக பெற்ற தொகையை திருப்பி வழங்கிவிட்டோம். அதனால் சொத்து வரி செலுத்த இயலவில்லை. ஆனால், அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் சொத்துவரியைச் செலுத்தாவிட்டால், 2 சதவீத அபராதத்தை வட்டியுடன் செலுத்த வேண்டுமென நோட்டீசில் குறிப்பிட்டுள்ளனர். மண்டபம் காலியாக இருந்தால், மாநகராட்சி சட்டப்படி பாதி வரியை திருப்பி வழங்க வேண்டும் என்று விதிகள் உள்ளன. அதுதொடர்பாக என் தரப்பில் மாநகராட்சிக்கு அனுப்பிய கடிதத்தின் மீது தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதுவரை, சொத்து வரி மீது அபராதம் விதிக்க தடை விதிக்க வேண்டும் என்று ரஜினி கூறியிருக்கிறார்.
கோடி கோடியாக சம்பாதிக்கும் ரஜினி, வரியை தள்ளுபடி செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்த நிலையில், ரஜினி வழக்கு நேற்று, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தபோது, பாதி வரி வசூலிக்கும்படி அனுப்பிய கடிதத்தில் உரிய முடிவெடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டுமென ரஜினி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டடார். ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதி, செப்டம்பர் 23 -ல் கடிதம் அனுப்பிவிட்டு செப்டம்பர் 29-ஆம் தேதியே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நீதிமன்ற நேரத்தை வீணடிப்பீர்களா? என கேள்வி எழுப்பினார்.

மாநகராட்சியிடம் மனு கொடுத்த ஒரு வாரத்தில் எப்படி வழக்கு தொடரமுடியும்? நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவகாசம் வேண்டாமா? நடிவடிக்கை எடுக்காவிட்டால், நினைவூட்டல் கடிதம் அனுப்ப வேண்டும் என்ற நடைமுறையைப் பின்பற்றவில்லையா? நீதிமன்றம் என்ன மாநகராட்சி அலுவலகமா? எனக் கேள்விகள் எழுப்பியதோடு, இந்த வழக்கை கடுமையான அபராதம் விதித்து, தள்ளுபடி செய்யப்போவதாகவும் எச்சரித்தார்.
இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக ரஜினி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதையடுத்து, அதற்கான மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம் மாலையில் பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.
இதையடுத்து,, ரஜினி, தான் செலுத்த வேண்டிய ரூ.6.5 லட்சம் வரியை இரவு 12 மணிக்குள் செலுத்த வேண்டும். அதை ரஜினிகாந்த் கட்ட தவறினால் 2 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ராகவேந்திரா மண்டப விவகாரத்தில் ரஜினியை ஹைகோர்ட் ஒரு பக்கம் எச்சரித்துள்ள நிலையில் சென்னை மாநகராட்சியும் கெடு விதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், ரஜினி செலுத்த வேண்டிய மொத்த தொகை 12லட்சத்து 96ஆயிரத்து 460 ரூபாய் என்றும், தற்போதைய 6 மாதத்திற்கான வரித்தொகையான 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே உடனே கட்ட வேண்டும் என்றும் மாநகராட்சி வலியுறுத்தி இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
கடந்த 2018ம் ஆண்டு முதலே, ரஜினி, தனது மண்டபத்திற்கான சொத்துவரியை சரியாக செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழலில்தான், ரஜினிகாந்த் புலம்பல் டிவிட் பதிவிட்டுள்ளார்.
அவரது டிவிட்டில், ராகவேந்திரா மண்டப சொத்து வரி… நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறை தவிர்த்திருக்கலாம்.. அனுபவமே பாடம்.
என பதிவிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel