சென்னை.
மத்திய அரசின் தூய்மையே சேவை திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மோடி தலைமையிலான பாரதியஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் தூய்மையை உறுதிபடுத்த தூய்மையே சேவை என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் தொடங்கி 3 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் வரும் அக்டோபர் 2ந்தேதி பிரசாரம் நடைபெற இருக்கிறது.
இத்திட்டத்தை மேலும் பிரபலப்படுத்த தூய்மையே சேவை என்ற பிரச்சாரத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார். இது அக்டோபர் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து பிரதமர் மோடி, நாடு முழுவதும் உள்ள பிரபலங்களுக்கு கடிதம் எழுதி ஆதரவு கோரியிருந்தார்.
அதில், தூய்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி விரும்பினார். எனவே, தூய்மை இந்தியாவை உருவாக்க உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். இந்த திட்டத்தின் மூலம் ஏழைகள், பின்தங்கிய மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் பிரதமரின் இந்த திட்டத்தை வரவேற்று நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில், தூய்மையே கடவுள் என்றும், இந்த திட்டத்திற்கு மோடி எடுத்து வரும் முயற்சிக்கு தான ஆதரவு தெரிவிப்பதாக ரஜினி தெரிவித்துள்ளார்.
தூய்மையே சேவை திட்டத்துக்கு அழைப்பு விடுத்து நடிகர் பிரபாஸ், இயக்குனர் ராஜமவுலி, கேரள நடிகர் மோகன்லால் உள்பட நாடு முழுவதும் உள்ள பிரபல நடிகர், நடிகைகளுக்கும் ஆதரவு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.