சென்னை

நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மு க் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்

நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்.30-ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடிவயிற்று பகுதியில் வீக்கம் காரணமாக அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவருக்கு ரத்தநாளத்தில் அடைப்பு இருப்பதாக ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு ரத்த நாள சீரமைப்பு சிகிச்சை செய்யப்பட்டது.

பின்னர் ஒருநாள் மருத்துவக் கண்காணிப்பில் இருந்த அவர் நேற்று இரவு வீடு திரும்பினார். இதற்கிடையே மருத்துவமனையில் இருக்கும் ரஜினிகாந்த் உடல்நலம் தேறி, சீக்கிரம் குணமடைய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்களும், ரசிகர்களும் வேண்டி, வாழ்த்தினர். இந்நிலையில் தான் சீக்கிரம் குணமடைய வேண்டும் என வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடிக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

என்மீது அக்கறைக் கொண்ட மற்றும் என் உடல்நலன் குறித்து கவலையுற்று, தனிப்பட்ட முறையில் நான் குணமடைய வாழ்த்திய மதிப்பிற்குரிய பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த நன்றி”

எனத் தெரிவித்துள்ளார்.

”நான் மருத்துவமனையில் இருக்கும் போது, எனது நலன் விசாரித்து, நான் சீக்கிரம் குணமடைய வாழ்த்திய, எனது அருமை நண்பர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” ”

என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.