சென்னை :

ரஜினி விரைவில் அமெரிக்க பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், உடல் நல செக்அப் மற்றும் ஓய்வுக்காக அங்கு ஒருமாதம் இருப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அரசியலுக்கு வருவது குறித்து எந்தவொரு உறுதியான முடிவையும் அறிவிக்காமல் இருந்து வந்த நடிகர் ரஜினிகாந்த், கடந்த வருடம் டிசம்பர் 3ம் தேதி “அரசியல் கட்சியை துவங்குவேன்” என்று தெரிவித்தார்.

ஆனாலும், ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக பெயர் மாற்றியதோடு சரி. மன்றத்துக்கு உறுப்பினரை சேருங்கள் என்றும், அரசியல் விவகாரங்களில் கருத்து தெரிவிக்கக் கூடாது என்றும் ரசிகர்களுக்கு உத்தரவிட்டார்.

அதற்கேற்ப ரசிகர்களும் மன்றங்களுக்கு உறுப்பினர்களை சேர்க்க முனைந்தனர். ஆனால் ஸ்டெர்லைட், நியூட்ரினோ, காவிரி உட்பட தமிழக பிரச்சினைகள் குறித்து ரஜினி கருத்து தெரிவிக்காததால், இப்பிரச்சினைகளில் ரஜினியின் கருத்து என்ன என்று மன்ற நிர்வாகிகளிடம் மக்கள் கேள்வி கேட்டனர். எதிர்பார்த்த அளவு, உறுப்பினர்களை சேர்க்க முடியாத மன்றத்தினர், மக்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியாமல் திணறினர்.

ஆகவே ஏப்ரல் மாதம் கட்சி பெயர் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலைவிய நேரத்தில், கட்சி அறிவிப்பை ரஜினி ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் அவர் உடல்  பரிசோனைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அங்கு ஒரு மாதத்துக்கும் மேல் பரிசோதனை மற்றும் ஓய்வெடுக்கும் ரஜினி, காலா பட ரிலீஸ் முடிந்ததும் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது. ஆகவே கட்சி பெயர் அறிவிப்பு மேலும் ஒத்திவைக்கப்படுகிறது.