தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ள நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா? மாட்டாரா? என அனைத்து தரப்பினரும் எதிர்நோக்கியுள்ளனர்.
அவருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளோர், ரஜினிகாந்த், கட்சி ஆரம்பித்து தேர்தல் பிரச்சாரத்தை முழுவீச்சில் மேற்கொள்வார் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.
அவர்கள் தெரிவித்த தகவல்:
அர்ஜுன் சம்பத் ( இந்து மக்கள் கட்சி நிறுவனர்):
“ஊரடங்கு காலத்திலும் நான், ரஜினிகாந்துடன் அடிக்கடி தொடர்பில் இருக்கிறேன். ரஜினி, ஏற்கனவே அரசியலில் நுழைந்து விட்டார். ஜனவரி மாதத்தில், ஆன்மீக அரசியலை முன்னிறுத்தி, பிரச்சாரம் செய்ய அவர் தயாராகி விட்டார். பீகார் தேர்தல் முடிந்ததும் ரஜினியின் அரசியல் பிரவேசம் முறைப்படி அறிவிக்கப்படும்”
செ.கு. தமிழரசன் ( முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் தலித் இயக்க தலைவர்):
“சரியான நேரத்தில் அரசியலுக்கு வருவதாக ரஜினிகாந்த் சொல்லி உள்ளார்.கொரோனா காரணமாக அவர் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட காலதாமதம் செய்கிறார். என்னுடனும், பிற தலைவர்களுடனும் ரஜினி ஆலோசித்து கொண்டிருக்கிறார். தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ளன. அரசியலுக்கு வரமாட்டேன் என அவர் சொல்லவில்லையே? முடிவை அறிவிக்க காலம் இருக்கிறது.’’
ரஜினி மக்கள் மன்ற மாவட்ட தலைவர் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை):
“ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது 200 சதவீதம் உறுதி. அவர் பின் வாங்க மாட்டார், எங்களுக்கு அவர் எப்போது கட்சி ஆரம்பிக்க போகிறார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை. ஆனால் நாங்கள் தேர்தல் பணியாற்ற இப்போதே தயாராக இருக்கிறோம்.”
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ள நிலையில், ரஜினிகாந்த் மதுரையில் பல லட்சம் பேர் பங்கேற்கும் மாநாட்டில் முறைப்படி கட்சி அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை தொடர்ந்து 20 மாவட்டங்களில் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேச உள்ளதாகவும் ரஜினிகாந்த், மன்றத்தினர் கூறினர்.
– பா.பாரதி