சென்னை: நாட்டின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்று, தமிழ்நாடு திரும்பிய ரஜினிகாந்த் நேற்று இரவு திடீரென சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், ரஜினிகாந்த் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவரது குடும்பத்தினர் பரபரப்புடன் காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாகவும், அவரது உடல்நிலை குறித்து பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அவரது மன்ற நிர்வாகி சுதாகர் டிவிட் பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் டெல்லி சென்றிருந்தார். அங்கு நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கு வழங்கும் விழாவில், ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதன்பின்னர் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார். அதைத்தொடர்ந்து சென்னை திரும்பியவர், தனது பேரப்பிள்ளைகள் உள்பட குழந்தைகளுடன் அண்ணா படத்தின் பிரிவியூ காட்சியை கண்டு ரசித்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், நேற்று மாலை திடீரென அவருக்கு உடல்நலப்பாதிப்பு ஏற்பட்டது. இதனால் உடனே அருகில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல்நலன் பரிசோதனைக்குதான் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டதாக, அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கூறிய நிலையில், மற்றொரு தரப்பினர், ரஜினிக்கு ஏற்பட்ட காய்ச்சல், தலைவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. மாறுபட்ட தகவல்களால் ரஜினியின் உடல் நிலை குறித்து ஏராளமான வதந்திகள் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரவின.
ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள ரஜினிகாந்துக்கு, சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும் அவரது உடல்நிலை மோசமாகும் என்பதால், தற்போது ஏற்பட்டுள்ள இன்பெக்ஷன் காரணமாக, அவரை ஐ.சி.யூ.வில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அங்கு அவரது உடலுக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்பட முழு உடல்நலன் பரிசோதனை செய்யப்பட்டது என்றும், ரஜினிகாந்துக்கு இன்பார்க்சன் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரஜினி குடும்பத்தினர் பரபரப்புடன் காணப்படுகின்றனர். ஆனால், இது தொடர்பாக காவேரி மருத்துவமனை சார்பில் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில்தான், ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் தன்னுடைய ட்விட்டர் பதிவில், ‘தலைவர் நலமாக இருக்கின்றார், வதந்திகளை நம்பவேண்டாம்’ என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். வேறு எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை.