சென்னை: நடிகர் ரஜினிகாந்ர்த இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி தமிழில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதுபோல தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் கட்சியினர், திரையுலகினர், ரசகிர்கள் என பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் காலையிலேயே அவருக்கு வாழ்த்து கூறுவதற்காக அவருடைய இல்லத்தின் முன்பு குவிந்து விட்டனர். மேலும், பல கோவில்களில் அவரது ரசிகர்கள் விசேஷ பூஜைகள் செய்வதுடன், பல இடங்களில் ஏழைகளுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.
ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு உள்ளார். அதில், “ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துகள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன.
திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவருடைய எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்! மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்! ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரை நூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் #SuperStar @rajinikanth அவர்களுக்கு உளம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!
மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்! இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ்த் திரையுலகின் அசைக்க முடியாத பேராளுமையாக 50 ஆண்டுகளாக கோலோச்சி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். திரையரங்குகளை திருவிழாக் கூடங்களாக மாற்றவல்ல தங்களின் Style Magic ரசிகர்களை மகிழ்விக்கட்டும் பல்லாண்டு! என கூறி உள்ளார்.
[youtube-feed feed=1]