காமராஜர் ஆட்சியை ஏற்படுத்தப்போவதாக ரஜினி கூறினார் என்று தமிழருவிமணியன் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய தமிழருவி மணியன் தெரிவித்ததாவது:
“யாரையும் விமர்சிக்கப்போவதில்லை என்று ரஜினிகாந்த் என்னிடம் தெரிவித்தார்.
மேலும், “நான் இன்னின்ன திட்டங்களை செய்ய திட்டமிட்டிருக்கிறேன். நான் இந்தந்த நோக்கங்களுக்காக அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்வேன். அதைச் சொல்லி வாக்கு வாங்கி முதல்வர் ஆகிவிட்டால், அதைச் செய்யத்தான் கவனம்செலுத்துவேன். எனக்கு எதிராக வைக்கும் விமர்சனங்கள் குறித்தோ பிற அரசியல் பிரமுகர்களை விமர்சிப்பது குறித்தோ நினைத்துப் பார்க்க மாட்டேன் என்று ரஜினி என்னிடம் தெரிவித்தார்.
இதுவரை யாரிடமும் சொல்லாததைச் சொல்கிறேன். காமராஜர் ஆட்சி அமைப்பதே என்வேலை” என்று ரஜினி தெரிவித்தார்” – இவ்வாறு தமிழருவி மணியன் கூறினார்.
ரஜினியைப் பொறுத்தவரை பா.ஜ.க.வுக்கு ஆதரவானவர் என்ற தோற்றமே இருக்கிறது. பொதுவாக அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினை குறித்து கருத்து தெரிவிக்காதவர் ரஜினி. ஆனால், மத்திய பாஜக அரசு கொண்டுவந்த 500,1000 ரூபாய் நோட்டு தடையை வரவேற்று “புதிய இந்தியா பிறந்தது” என்று பிரதமர் மோடிக்கு வாழ்த்து கூறினார்.
தனது மேடைப் பேச்சின் போது பல தலைவர்களைப் பற்றிய நிகழ்வுகளையும் கதைகளையும் பேசியிருக்கிறார் ரஜினி. ஆனால் காமராஜர் பற்றி பேசியதில்லை.
இந்த நிலையில், காமராஜர் ஆட்சி அமைப்பேன் என்று ரஜினி கூறியதாக தமிழருவிமணியன் தெரிவிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், “ரஜினி காந்திய வழியில் நடக்க விரும்புகிறார் ரஜினி” என்று தமிழருவி மணியன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.