அரசியலில் அடியெடுத்து வைத்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த், தனது “சூப்பர் ஸ்டார்” அடைமொழியை துறந்துவிட்டார். அடுத்து அவருக்கு என்ன அடைமொழி சூட்டப்படும் என்கிற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
எழுபதுகளின் இறுதியில் ரஜினியின் “பைரவி” திரைப்படம் வெளியானது. அப்போது அவர் வளர்ந்துவரும் நடிகராக இருந்தார். அந்த காலகட்டத்தில் பைரவி படம் வெளியானது. அப்போது தயாரிப்பாளர் எஸ்.தாணு, ரஜினிகாந்துக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தை அளித்தார். அதிலிருந்து அவரது ரசிகர்கள் அவரை சூப்பர் ஸ்டார் என்றே அழைத்து வருகின்றனர்.
ரஜினியின் திரைப்படங்களில் மட்டுமின்றி, பட விளம்பரங்கள், ரசிகர்மன்ற நிகழ்ச்சிகள் அனைத்திலும் சூப்பர் ஸ்டார் என்றே அழைக்கப்பட்டார். கடந்த 2014ம் வருடம் தனது ட்விட்டர் பக்கத்தைத் துவங்கிய ரஜினிகாந்த், தனது பெயருக்குக் கீழே சூப்பர் ஸ்டார் என்றும் பதிவிட்டிருந்தார்.
ஆனால் அந்த பட்டத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து தற்போது நீக்கியுள்ளார்.
இது குறித்து ரஜினிகாந்த் வட்டாரத்தில், “எம்.ஜி.ஆரை ஃபாலோ செய்ய ரஜினி திட்டமிட்டுள்ளார். எம்.ஜி.ஆர். நடிகராக இருந்தபோது மக்கள் நடிகர் , புரட்சி நடிகர் என்றெல்லாம் பட்டம் இருந்தது. அரசியலுக்கு வந்தபிறகு புரட்சித்தலைவர் என்ற பட்டம் எம்.ஜி.ஆருக்குப் பின்னால் ஒட்டிக்கொண்டது.
அதே போல திரைத்துறையில் மட்டும் இருந்தவரை சூப்பர் ஸ்டார் பட்டம் பொறுத்தமாக இருக்கும். அரசியலுக்கும் வந்த பிறகு அதற்கேற்ப (எம்.ஜி.ஆர். போல) ஒரு புதிய பட்டத்தை சூட்டிக்கொள்ள ரஜினி திட்டமிட்டுள்ளார்” என்று கூறப்படுகிறது.
மேலும், “எம்.ஜி.ஆர். வழியிலேயே புரட்சி என்ற வார்த்தை வரும்படியாக அரசியலுக்கு ஏற்ப புதிய பட்டத்தை “ஏற்க” ரஜினி தயாராகி வருகிறார். ஆனால் அதில் பலவித பெயர்கள் அடிபட்டன. புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, புரட்சிக்கலைஞர் என்று திரையிலிருந்து அரசியலுக்கு வந்த பிரபலங்கள் பலரது பெயரில் புரட்சி இருந்தது.. இருக்கிறது.
அதே போல புரட்சி தளபதி என்கிற பட்டம் ஆலோசிக்கப்பட்டது. ரஜினி நடித்த தளபதி படம் மிகப் பிரலமானது. அதோடு, மக்களின் தளபதியாக ரஜினி இருப்பார் என்பதற்கு ஏற்ப இந்த பட்டம் யோசிக்கப்பட்டது.
ஆனால் தளபதி என்றால் அரசியலில் மு.க.ஸ்டாலினும், திரைத்துறையில் விஜய்யும் இருக்கிறார்கள். ஆகவே அந்தப்பட்டம் வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டது.
தமிழன் என்கிற வார்த்தையும் வரும்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆலோசிக்கப்பட்டது. ஆனால் புரட்சித்தமிழன் என்று சத்யராஜ் இருக்கிறார் என்பதால் அந்தப்பெயரும் பரிசீலனையில் இருந்து நீக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று ரிஷிகேஷ் புறப்பட்டுவிட்டார் ரஜினி. அவர் திரும்பி வருவதற்குள் நான்கைந்து பட்டங்களை தயார்படுத்தச் சொல்லியிருக்கிறார். வந்தபிறகு அந்த பட்டங்களில் இருந்து ஒரு பட்டத்தை தேர்ந்தெடுப்பார்” என்றும் ரஜினி வட்டாரத்தில் கூறப்படுகிறது.