1978ம் ஆண்டு வெளியானது ரஜினி நடித்த பைரவி திரைப்படம். ரஜினி நாயகனாக நடிக்க, ஜோடியாக ஸ்ரீபிரியா நடித்தார். எம். பாஸ்கர் இயக்கிய இந்தத் திரைப்படத்தை கலைஞானம் தயாரித்தார்.

அந்தப் படத்தின் சென்னை நகர விநியோக உரிமையை வாங்கியவர் கலைப்புலி தாணு. அப்போது அவர் எஸ்.தாணு என்ற பெயரில் விநியோகஸ்தராக இருந்தார்.

அண்ணா சாலையில் “பைரவி” படம் திரையிடப்பட்ட பிளாசா தியேட்டரில், ரஜினியின் 35 அடி உயர `கட் அவுட்’ வைத்தார் தாணு. தியேட்டரைவிட  உயரமாக வைக்கப்பட்ட அந்த கட் அவுட் அனைவரையும் நிமிர்ந்துபார்க்க வைத்தது.

தவிர அப்போதே மல்டி கலரில் 3 விதமான போஸ்டர்களை அச்சடித்து, சென்னை நகரம் முழுவதும் ஒட்டினார். அப்போது அது புதுமையான விசயம்.

மூன்றில் ஒரு போஸ்டரில், படமெடுத்தாடும் நல்ல பாம்பை கையில் பிடித்தபடி ரஜினி தோன்றும் போஸ்டர், ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

அந்த போஸ்டர்களில் ரஜினிகாந்தை `சூப்பர் ஸ்டார்’ என்று குறிப்பிட்டிருந்தார் தாணு.

ரஜினிக்கு,  முதன் முததலாக சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழி அளிக்கப்பட்டது அப்போதுதான்.

இது குறித்து தாணு என்ன சொல்கிறார்?

“ரஜினியின் நடிப்பு, ஸ்டைல் ஆகியவற்றுக்கு நானும் தீவிர ரசிகன். ஆகவே, அவர் முதன் முதலாக கதாநாயகனாக நடித்த “பைரவி” படத்தின் விநியோக உரிமையை வாங்க விரும்பினேன்.

எஸ்.மகாலிங்கம், ஆர்.பி.ஜெயகுமார் ஆகிய என்  நண்பர்களை பங்குதாரர்களாகச் சேர்த்துக்கொண்டு, பைரவி படத்தின் சென்னை நகர விநியோக உரிமையை வாங்கி வெளியிட்டேன்.

படம் நன்றாக ஓடியது. படத்தை மக்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள ரஜினி விரும்பினார். ஆகவே படம் வெளியாகி இருந்த திரையரங்குகளில்  ஒன்றான ராஜகுமாரி தியேட்டருக்கு பகல் காட்சிக்கு  கலைஞானம், பஞ்சு அருணாசலம், கே.என்.சுப்பு ஆகியோருடன் ரஜினி வந்தார்.

ரஜினி – கலைப்புலி தாணு

அப்போது போஸ்டர்களை ரஜினி பார்த்திருக்கிறார்.  `சென்னை நகர விநியோகஸ்தர் யார்?’ என்று கேட்டிருக்கிறார்.  அருகில் இருந்தவர்களிடம் கேட்க..   என்னிடம் வந்து, `ரஜினி சார் உங்களை பார்க்க விரும்புகிறார்’ என்று தகவல் சொன்னார்கள்.

நான் ரஜினியை பார்க்கச் சென்றேன். என்னைப் பார்த்தவுடனே, `பென்டாஸ்டிக் போஸ்டர்! பியூட்டிபுல் பப்ளிசிட்டி’ என்று உற்சாகமாக என் கையைப் பிடித்துக் குலுக்கினார்.  எனக்கு மிக மகிழ்ச்சி.

பிளாசா டாக்கீசில் வைத்திருந்த பெரிய `கட் அவுட்’டையும் அவர் பார்த்திருக்கிறார்.

பிறகு அவரை நான் சந்தித்தபோது, `உங்கள் விளம்பரங்கள் எனக்குள் ஒருவித வைப்ரேஷன் (அதிர்வுகள்) உண்டாக்குகின்றன’ என்றார் மகிழ்ச்சியுடன்.

அடுத்த சில நாட்களில் பட அதிபர் கலைஞானம், டைரக்டர் எம்.பாஸ்கர் இருவரும் என்னை வந்து பார்த்தார்கள்.

“எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகிய மூத்த கலைஞர்கள் இருக்கும்போது, தன்னை சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதை ரஜினி விரும்பவில்லை. அப்படி விளம்பரப்படுத்துவதை நிறுத்திவிடும்படி கூறினார்” என்றார்கள்.

ஆனால், இதற்குள் சூப்பர் ஸ்டார் என்ற பெயர் பிரபலமாகி விட்டது. ரஜினியை பார்க்கும்போதெல்லாம் ரசிகர்கள் `சூப்பர் ஸ்டார்’ என்று குரல் எழுப்ப ஆரம்பித்து விட்டனர்.

ஆகவே நான் துணிந்து `கிரேட்டஸ்ட் சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிக்கும் பைரவி என்று விளம்பரம் செய்தேன்” என்றார் தாணு.

தமிழ்த்திரையுலகில் அறிமுகமான நேரத்தில் ரஜினிகாந்த் “ஸ்டைல் மன்னன்” என்று அழைக்கப்பட்டார். “பைரவி” படத்துக்குப்பின், “சூப்பர் ஸ்டார்” என்றே குறிப்பிடப்படுகிறார்.

கடந்த நாற்பது வருடங்களாக தனது பெயருக்குப் பிறகு இணைந்தே இரு்த அந்த சூப்பர் ஸ்டார் பட்டத்தைத்தான் தற்போது துறந்திருக்கிறார் ரஜினிகாந்த்.