சென்னை: அரசியலுக்கு வரப்போவதாக கடந்த சில ஆண்டுகளாக கூறிவரும் ரஜினி, அதற்கான  முயற்சிகளில் ஈடுபடாமல் உள்ள நிலையில், அவரை தன்பக்கம் இழுக்க பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இன்று தமிழகம் வரும் அமித்ஷாவுடன் ரஜினி சந்திப்புக்கு சிலர் முயற்சி மேற்கொண்டு வந்தனர். ஆனால், ரஜினி அமித்ஷாவை சந்திக்க மறுப்பு தெரிவித்து இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

உள்துறை அமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான அமித்ஷா, இன்று பிற்பகல் 1.40 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார். விமான நிலையத்தில், மத்திய அமைச்சர் அமித்ஷாவை தமிழக பாஜக நிர்வாகிகள் வரவேற்கிறார்கள். பின்னர் அங்கிருந்து காரில் புறப்படும் அமித்ஷா, பிற்பகல்1.55 மணிக்கு எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ்-க்கு சென்று ஓய்வு எடுக்கிறார். அதைத்தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.  திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையில் 380 கோடியில் புதிய நீர்த்தேக்க திட்டத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதோடு, 61ஆயிரத்து 843 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி உரையாற்றுகிறார்

நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, 6.15 மணிக்கு லீலா பேலசுக்கு அமித்ஷா செல்கிறார். அங்கு மாலை 6.20 மணிக்கு பாஜக மாநில நிர்வாகிகளையும், பல்வேறு அணிகளின் தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார். பாஜகவின் உயர்மட்ட குழுவினருடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். அதைத்தொடர்ந்து அதிமுக  கதலைவர்களையும் சந்தித்து கூட்டணி மற்றும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், ரஜினியை பாஜக ஆதரவாளராக  மாற்றும் செயலில் ஈடுபட்டு வரும் ஆடிட்டர் குருமூர்த்தி உள்பட சிலர்,  அமித்ஷாவுடன் ரஜினியை சந்திக்க  முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், தன் மீது அரசியல் சாயம் பூசப்பட்டுவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கும் ரஜினி, இதுவரை அமித்ஷாவை சந்திக்க ஒப்புதல் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அமித்ஷாவின் தமிழக வருகை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.