சென்னை:
“ஆண்டவன். நாளை எப்படி செயல்பட வைப்பானோ அப்படி செயல்படுவேன்” என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியதை அடுத்து அவர் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே மீண்டும் ஏற்பட்டிருக்கிறது.
சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு இன்று ரசிகர்களை சந்தித்துவருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இன்று முதல் வரும் 19ம் தேதி வரை இந்த சந்திப்பு நடக்கிறது. முதல் நாளான இன்று, மூன்று மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார்.
காலையில் நிகழ்ச்சி துவங்கியவுடன், ரஜினி பேசினார். பிறகு, செய்தியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். தற்போது, ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார் ரஜினி.
முன்னதாக அவர் பேசியதாவது:
““அரசியலுக்கு வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை அருகே கூட சேர்க்கமாட்டேன்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கூட்டணிக்கு ஆதரவு தர நேர்ந்தது. அந்த கூட்டணி வெற்றி பெற்றது.. சில ஆதாயாத்துக்காக ரசிகர்களை பயன்படுத்துவதால் அந்த நிலையை ரசிகர்களுக்கு சொல்லும் நிலையில் உள்ளதால் தேர்தல் நேரத்தில் நான் ஆதரவு இல்லை என சொல்ல நேருகிறது. என் ரசிகர்களை தவறாக பயன்படுத்த கூடாது என்பற்காக இவ்வாறு சொல்கிறேன்” என்று பேசினார்.
மேலும், ” ஆண்டவன் கையில்தான் என் வாழ்க்கை இருக்கிறது. என்ன பொறுப்பு கொடுத்தாலும் நியாயமாக செயல்படுவேன். மனசாட்சிபடியே நான் என்றும் செயல்படுவேன். நாளை நான் எந்ன செய்ய வேண்டும் என்பதை ஆண்டவன் தீர்மானிக்கிறான். இன்று நடிகனாக என்னை செயல்பட வைக்கிறான் ஆண்டவன். நாளை எப்படி செயல்பட வைப்பானோ அப்படி செயல்படுவேன்” என்று ரஜினி பேசினார்.
ரஜினி, தான் நடித்த அண்ணாமலை திரைப்படத்தில் மாடு வளர்ப்பவராக நடித்தார். அதில் ஒரு காட்சியில், “என் மாடுங்களுக்கு ஒரு ஆபத்து என்றால்..” என்கிற ரீதியில் சொடக்கு போட்டு ஒரு வசனம் பேசுவார்.
உடனே, “மாடுகள்” என்று மறைமுகமாக தனது ரசிகர்களைச் சொல்கிறார் ரஜினி. அதாவது தனது மாடுகளுக்கு (ரசிகர்களுக்கு) ஏதாவது ஆபத்து என்றால் சும்மா இருக்க மாட்டேன்” என்று சொல்கிறார்” என்பதாக கருத்துக்கள் பரவின.
அந்த அளவுக்கு, ரஜினியின் வசனங்களுக்கே பல்வேறு அர்த்தம் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில், “நாளை ஆண்டவன் எப்படி செயல்பட வைப்பானோ அப்படி செயல்படுவேன்” என்று சொல்லியிருப்பதும் அரசியல் ரீதியாகவே பார்க்கப்படுகிறது. அதாவது விரைவில் அரசியலுக்கு வரப்போவதாக ரஜினி சொல்வதாக கருதப்படுகிறது.
அதே நேரம், “தனது ஒவ்வொரு படம் வெளியாகும்போது இப்படி பல அர்த்தங்கள் தொணிக்கும்படி பேசுவது வழக்கமான ஒன்றுதான். இன்றைய பேச்சிலேயே அரசியல் ரீதியாக தன்னை சிலர் அணுகும்போது தான் அதற்கு உடன்படுவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும், படம் வெளியாகும்போது, தான் ஏதாவது பேசி பரபரப்பு ஏற்படுத்துவதாக கூறுகிறார்கள் ஆனால் அப்படி செயல்பட வேண்டிய அவசியம் தனக்கில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
தவிர, “அந்த ஆண்டவன் சொல்றான்.. இந்த அருணாசலம் செய்யறான்” என்பது அவருடை பழைய டயலாக்தான். ஆக அவர் அரசியலுக்கு வருவார் என்பது உறுதியான ஒன்றல்ல” என்ற கருத்தும் கூறப்படுகிறது.