சென்னை: அரசியல் கட்சியை தொடங்குவதில் தீவிரம் காட்டி வரும் ரஜினிகாந்த், தனது கட்சியின் பெயரை ‘மக்கள் சேவை கட்சி’ என்று தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக மாற்றி சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். அதைத்தொடர்ந்து அரசியலில் குதிக்கப்போவதாக கூறியவர், தனது அரசியல் ஆன்மிக அரசியல் என்றும் தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து, வரும் 31ந்தேதி கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதாக தெரிவித்துள்ளார். அதற்கான பணிகளை, தான் நியமித்த ஒருங்கிணைப்பாளர் மற்றும் கட்சியின் மேலாளர் செய்து வருகின்றனர். ரஜினி தற்போது அண்ணாத்த படத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார்.
இந்த நிலையில், ரஜினி தரப்பில் மக்கள் சேவைக் கட்சி என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் பெயர்ப்பதிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது. அத்துடன், 234 தொகுதிகளுக்கும் பொதுசின்னம் கேட்கப்பட்டதாகவும், பாபா படத்தில் இடம் பெற்ற ‘ஹஸ்தா முத்திரை ‘ சின்னத்தை கேட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், தேர்தல் ஆணையம், அந்த சின்னம் ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடையாளமாக இருப்பதால், அதை ஒதுக்க மறுத்துவிட்டதாகவும், அதற்கு பதிலாக ஆட்டோ சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் கடிதம் வெளியாகி உள்ளது.