பாலகிருஷ்ணன்

 

“நடிகர் ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் ஆலையின் கையாள்” என்று மார்க். கம்யூ கட்சியின் தமிழ் மாநில செயலாளற் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்கள் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்த், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்.

காயம்பட்ட சுமார் நாற்பது பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நிதி உதவி அளித்தார்.

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தூத்துக்குடி போராட்டத்தில் சமூகவிரோதிகள் ஊடுருவியதால் கலவரம் ஏற்பட்டது” என்று தெரிவித்தார்.

இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உட்பட பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சி.பி.எம். கட்சியின் தமிழ்மாநில செயலாளரான கே. பாலகிருஷ்ணனும் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

“போராட்டத்தில் சமூகவிரோதிகள் ஊடுருவியதாகவும் அவர்களால்தான் பிரச்சினை ஏற்பட்டது என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்த அன்று போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் முன்பே அங்கு தீப்பற்றி எரிந்திருக்கிறது. தவிர போராடும் மக்கள் பெரும்பாலோர் குடும்பத்துடன் சென்றிருக்கிறார்கள். அவர்கள் வன்முறையாளர்களா?

அப்படி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் வன்முறையாளர்கள் என்றால், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது நியாயம் என்கிறாரா ரஜினிகாந்த்?

சினிமாவில் வசனம் பேசுவது போன்றதல்ல இது.  பல்லாயிரக்கணக்கான மக்கள் அமைதியாக நடத்திய போராட்டம். இதில் எந்தவித விதிமுறையையும் பின்பற்றாமல் அராஜகமாக காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறது. இதையெல்லாம் ரஜினி உணரவேண்டும்.

போராடாதே என்று மக்களைக் கூறுகிறார் இவர். அப்படியானால் கொடுமையான ஆலையின் நச்சு வாயுவால் மக்கள் மாள வேண்டுமா?

ஸ்டெர்லைட் ஆலையின் – கார்பரேட் நிறுவனங்களின் – கையாளாக பேசுகிறார் நடிகர் ரஜினிகாந்த்” என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.