சென்னை: 4ஆண்டு சிறை தண்டனை முடிந்து சென்னை திரும்பிய சசிகலாவிடம்,  அரசியலைக்கண்டு பயந்து ஓடிய ரஜினிகாந்த் நலம் விசாரித்தார் என, டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சசிகலாவை நேற்று நள்ளிரவு சென்னை வந்தடைந்த நிலையில் இரவு தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கினார். அங்கு டிடிவி தினகரன் செய்தியளார்களை சந்தித்தார். அப்போது,   “சின்னம்மாவுக்கு கூடிய தொண்டர்கள், மக்கள் கூட்டம். இதன் வாயிலாக, சசிகலா  எந்த தவறும் செய்யவில்லை என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

‘சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. கர்நாடகாவிலும், தமிழகத்திலும் தன்னெழுச்சியாக வரவேற்பு நிகழ்த்திய தொண்டர்களுக்கு நன்றி. அம்மாவின் உண்மை தொண்டர்கள் ,லட்சோபலட்சம் கழக உடன்பிறப்புகள் பொது மக்களுக்கு நன்றி.

கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு தரப்பிலிருந்து நெருக்கடி அச்சுறுத்தல் கொடுக்கப்பட்டது” என்றவர், “அதிமுகவில் இன்னமும் ஸ்லீப்பர் செல் உள்ளனர். ஸ்லீப்பர் செல் எம்எல்ஏவாக தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை . அதிமுக நிர்வாகியாக கூட இருக்கலாம்.

அதிமுக பொதுக்குழு கூட்டவோ, கட்சியில் இருந்து ஒருவரை நீக்கவோ, பொதுச் செயலாளருக்கு தான் அதிகாரம் உள்ளது. சசிகலாதான் பொதுக் குழுவை கூட்ட முடியும். அதிமுக பொதுக் குழுவை கூட்ட பொதுச் செயலாளர் என்ற முறையில் சசிகலாவுக்கே உரிமை உண்டு ” என்றார்.

மேலும், சசிகலா உடல்நிலை குறித்து,  நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு   விசாரித்தார் என்று கூறினார்.