தனக்கு டார்ச்சர் கொடுப்பவர்களை பழிக்கு பழி வாங்குவது, பஞ்ச் டயலாக் பேசுவது எல்லாம் சினிமாவில் மட்டும் ரஜினி கடை பிடிக்கும் வழக்கம். தனிப்பட்ட முறையில் அவரது அணுகுமுறை வேறு.
தன்னை எதிர்த்து பேசுவபர்கள் – செயல்படுபவர்களை அன்போடு அழைத்து பேசி, அரவணைத்து தனக்கு ஆதரவாக மாற்றுவது ரஜினியின் ரியல் ஸ்டைல்.
1996ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நேரத்தில் அதிமுக மேடையில் ஏறிய நடிகை மனோரமா ஊர் ஊராகச் சென்று ரஜினியை மிக கொச்சையாக பேசினார். அவரது பேச்சைக் கேட்ட ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல.. பொது மக்களும் கூட அதிர்ச்சியானார்கள். அப்டியொரு பேச்சு. பத்திரிகைகளும் ரஜினியை வெளுத்து வாங்கினார் மனோரமா.
ஆனால் ரஜினி அசரவே இல்லை. மனோரமாவுக்கும் தனக்குமான திரையுலக சம்பவங்களை நினைவு கூர்ந்து நெகிழ்ச்சியாக பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்தார். அதுமட்டுமல்ல… தனது அடுத்த படத்தில் மனோரமாவை வற்புறுத்தி அழைத்து முக்கிய கேரக்டர் கொடுத்தார். அந்த படத்தில் ரஜினியை மனோரமா வெகுவாக புகழ்வது போல வசனங்கள் வைக்கப்பட்டன.
திரைக்கும் நிஜத்துக்குமான வேறுபாடு அறியாத ரசிகர்ககளும் கைதட்டி மகிழ்ந்தனர். தவிர, மனோரமாவின் ரஜினி எதிர்ப்பும் அத்தோடு முடிவுக்கு வந்தது.
அதே போல, தன்னை எதிர்த்து மேடைகளில் கடுமையாக பேசிய நடிகர் மன்சூர் அலிகானை அழைத்து அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுத்தார். அதுவும் ரஜினியை புகழும்படியான கேரக்டர். அத்தோடு மன்சூரின் ரஜினி எதிர்ப்பும் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் சமீபகாலமாக ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக கலாய்த்து வந்தார் நடிகை கஸ்தூரி.
““நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்பாராத சூழ்நிலையில்கூட டக்கென முடிவெடுக்கும் திறம் வேண்டும். வருவேனா மாட்டேனா என்று வருடக்கணக்கில் யோசிப்பவரை… ‘போர்’ அப்பிடின்னு கேட்டு, போரடிக்குது…” என்று ரஜினியை விமர்சனம் செய்திருந்தார் கஸ்தூரி.
இந்த நிலையில் கஸ்தூரியை தொடர்புகொண்ட ரஜினி, தனது வீட்டுக்கு வருமாறு அழைத்தார். இதையடுத்து நேற்று ரஜினியின் போயஸ் இல்லத்தில் அவரைச் சந்தித்தார் கஸ்தூரி.
ஆனால் ரஜினி அழைத்தாதக இருக்கக்கூடாது என்பதாலோ என்னவோ, தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து பெறவே ரஜினியை சந்தித்தாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கஸ்தூரி.
ஆனால் ஒருவரை மிகக் கடுமையாக விமர்சித்துவிட்டு அவரிடம் வாழ்த்துபெற நினைப்பாரா என்ற கேள்வி எழுகிறது.
இதற்கு பதிலாக அதே ட்விட்டில் ஒரு விசயத்தைத் தெரிவித்திருக்கிறார் கஸ்தூரி. அதாவது, “ரஜினியை சந்தித்து அரசியல் குறித்து விவாதித்தேன். அவரது அரசியல் பார்வை மற்றும் அரசியல் திட்டங்கள் குறித்து தெரிந்துகொண்டேன். நம்பிக்கையுடன் உள்ளேன்” என்று கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
ஆக.. நடிகை கஸ்தூரியுடன் அரசியல் குறித்து ஆலோசனை செய்திருக்கிறார் ரஜினி. தவிர தனது அரசியல் திட்டம், பார்வை குறித்தும் கஸ்தூரியிடம் விளக்கியிருக்கிறார்.
ஆம்.. இதுதான் ரஜினியின் பாணி. தன்னை விமர்சிப்பவர்களை அழைத்து அன்போடு பேசி அரவணைத்துவிடுவார். இதுதான் கஸ்தூரியிடமும் நடந்திருக்கிறது.
அதே நேரம், “இது சினிமா நட்சத்திரங்களிடம்தான் எடுபடும். சமீபத்திய ரசிகர் கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி மற்றும் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை பாராட்டிப் பேசினார் ரஜினி. ஆனால் அவர்கள் ரஜினியை தொடரந்து விமர்சித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்” என்றும் ஒரு கருத்து வைக்கப்டுகிறது.