மதுரை: மதுரையில் இன்று 2 வது நாளாக சுற்றுப்பயணம் செய்து வரும் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், நானும் ரஜினியும் சினிமாவிலும் போட்டியாளர்கள் அல்ல; எங்களை கொலு பொம்மையாக்கியது மக்கள்தான், என கூறினார்.
தமிழக சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு, அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் சுறுசுறுப்பு காட்டத்தொடங்கிவிட்டன. இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனும், கடந்த 13ந்தேதி முதல் 16ந்தேதி வரையிலான 4 நாட்கள் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
“சீரமைப்போம் தமிழகம்” என்ற பெயரில் தனது தேர்தல் பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன், எம்ஜிஆர், தனது தேர்தல் பிரசாரத்தை முதன்முதலாக மதுரையில் தொடங்கி வெற்றிகளை குவித்ததை கணக்கில்கொண்டு, கமல்ஹாசனும் அதை ராசியாக எண்ணி தனது பிரசாரத்தை மதுரையிலேயே தொடங்கி உள்ளார். மதுரையில் பல்வேறு இடங்களுக்கு சென்ற கமல்ஹாசனுக்கு சென்ற இடத்தில் எல்லாம் கூட்டம் அலைமோதியது. அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், வர இருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் நான் கட்டாயம் போட்டியிடுவேன். எந்த தொகுதி என்பது பின்னர் அறிவிக்கப்படும். அடுத்தவர்களின் நம்பிக்கைக்கு எதிராக நான் கருத்து சொல்லமாட்டேன் நான் நாத்திகவாதி அல்ல, பகுத்தறிவுவாதி என்றும், மேல்மட்டத்தில் இருந்து தொடரும் ஊழலை ஒழிப்பதே பிரதான நோக்கம் என்று பஞ்ச் டயலாக் பேசினார்.
அரசியல் பயணம் என்பது லட்சியத்தை நோக்கிய பயணமாக இருக்க வேண்டும். லஞ்சமற்ற அரசாக இருக்க வேண்டும். எனக்கு வரும் கூட்டத்தை பார்த்து அமைச்சர்கள் தூக்கம் இல்லாமல் உள்ளனர் என்றும் தமிழக அமைச்சர்களை கலாய்த்தார். அதுபோல ரஜினியை வைத்து பாஜக அரசியல் செய்யமாட்டார்கள் என நினைக்கிறேன். ரஜினியை வைத்து சினிமா வேண்டுமானால் செய்வார்கள் என்றார் கமல்ஹாசன்.
இதுதொடர்பாக டிவிட்டும் பதிவிட்டிருந்தார். அதில், காசுக்காகக் கூடுவது கும்பல்; லட்சியத்திற்காகத் திரள்வதன் பெயர் புரட்சி! மக்கள் புரட்சியை மதுரையில் நிகழ்த்திக் காட்டிய எம் கட்சியின் அனைத்து நிர்வாகிகளுக்கும், அணிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள். #எதுவும்_தடையில்லை #சீரமைப்போம்_தமிழகத்தை என கமல் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த நிலையில், இன்று உசிலம்பட்டியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகத்தை கமலஹாசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ஆனால், பல இடங்களில் அவர் பொதுமக்களிடையே பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. உரிய அனுமதி பெறவில்லை என்று காரணம் சொல்லப்பட்டது.
இன்று மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் உணவு விடுதியில் தொழிலதிபர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் கமல்ஹாசன்.
அப்போது, “ஆளும் கட்சியினருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் இருக்கிறது. எங்களுக்கு ஆதரவு பெருகும் என்பதால் பிரசாரத்திற்கு அனுமதி மறுத்துள்ளனர்” என்று குற்றம் சாட்டினார்.
கூட்டணி குறித்த கேள்விக்கு, “சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது அணி கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன். மதுரை எனக்கு நெருக்கமான ஊர் என்பதால் இங்கு பிரசாரத்தை தொடங்கினேன். சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன்” என்று தெரிவித்தார்.