இமயமலை சென்றிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், சென்னை திரும்பி உடனடியாக அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் டிசம்பர் மாதம், தான் அரசியல் கட்சி துவங்கப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். தனது பெயரில் இயங்கி வரும் ரசிகர் மன்றங்கள் மக்கள் மன்றங்களாக செயல்படும் என்றார். பாபா முத்திரையுடன் சின்னத்தையும் அறிமுகப்படுத்தினார்.
ஆனாலும் முக்கிய பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்த்தார். இந்த நிலையில் இமயமலைக்கு சென்றிருக்கிறார். அங்கிருந்து திரும்பிய பிறகு கட்சி பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்துவார் என்று கூறப்பட்டது.
இது குறித்து அவரது மன்ற வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
“இமயமலையில் இருந்து திரும்பிய பிறகு கட்சி பெயர், கொடியை அறிமுகப்படுத்துவார். இதற்காக சென்னை அல்லது திருச்சியில் மாநாடு நடக்கும்.
அதன் பிறகு உடனடியாக அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். காரணம், அவரது உடல் நிலை சில வருடங்களுக்கு முன் கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பினார்.
தற்போது தீவிர அரசியிலில் ஈடுபட இருக்கும் நிலையில் உடல் செக் அப் செய்துகொள்ள அமெரிக்கா செல்கிறார். திரும்பி வந்த பிறகு தமிழகம் மு முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்” என்று மன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.