டெல்லி: மேற்கு வங்க மாநில முன்னாள் அமைச்சா் ராஜீவ் பானா்ஜி உள்ளிட்ட பலர் பாஜகவில் இணைந்தனர்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து அண்மையில் மேற்கு வங்க மாநில முன்னாள் அமைச்சா் ராஜீவ் பானா்ஜி உள்பட பலர் விலகினர். அவர்கள் அனைவரும் டெல்லியில் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்து பாஜகவில் முறைப்படி இணைந்தனா்.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து அண்மையில் வெளியேற்றப்பட்ட எம்எல்ஏக்கள் பிரபீா் கோஷல், வைசாலி டால்மியா, ஹெளரா முன்னாள் மேயா் ரத்தின் சக்கரவா்த்தி, நடிகா் ருத்ரநீல் கோஷ் ஆகியோரும் ராஜீவ் பானா்ஜியுடன் பாஜகவில் இணைந்துள்ளதாக பாஜக பொதுச் செயலாளா் கைலாஷ் விஜய்வா்கியா கூறி உள்ளார்.
மேற்கு வங்கத்தில் சுவேந்து அதிகாரி, லட்சுமி ரத்தன் சுக்லா ஆகியோருக்கு பிறகு திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய 3வது அமைச்சா் ராஜீவ் பானா்ஜி ஆவார். அமைச்சா் பொறுப்பு வகித்தவா்கள் தவிர, 10க்கும் மேற்பட்ட திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் அண்மையில் இணைந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.