தேர்தல் 2016: ரசிகர்கள் யாதரவு யாருக்கு? : பகுதி 2
மிக அதிக ரசிகர்களைப் பெற்றிருக்கும் “சூப்பர் ஸ்டார்” ரஜினி, யாருக்கு ஆதரவாக “வாய்ஸ்” தருவார்?
1980களில்தான் ரஜினிகாந்த் ரசிகர் மன்றங்கள் உருவாக ஆரம்பித்தன. 1990களில் தமிழகத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மன்றங்களும், பல லட்சம் உறுப்பினர்களும் இருந்தார்கள். ரஜினியின் நண்பரான சத்தியநாராயணா மன்றங்களை வழிநடத்தினார். ரஜினி அரசியலுக்கு வராவிட்டாலும், “வந்துவிடுவார்” என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு தீவிரமாக இருந்த காலம் அது. துடிப்பான ரசிகர்களை அரவணைத்துச் சென்றார் சத்தியநாராயணா.
ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக ஒதுங்கி இருக்கிறார். . ரஜினியின் இன்னொரு நண்பரான சுதாகர் என்பவர் தான் தற்போது மன்ற பொறுப்புகளை கவனித்து வருகிறார். பெயருக்கு மன்றம் என இருக்கிறதே தவிர, தலைமைக்கும் ரசிகர்களுக்கும் தொடர்பு ஏதும் பெரிதாக இல்லை. ரஜினியும் முன்பு போல மன்றங்கள் மீது அக்கறை காண்பிப்பது இலலை, புதிய மன்றங்களுக்கும் இப்போது அனுமதி இல்லை.
அவரது தற்போதைய நோக்கம், ,’கபாலி’யை விரைவில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதே. ஆகவே தேர்தல் குறித்து வாய்ஸ் கொடுக்கப்போவதில்லை.
ஆனால் சில இடங்களில் ரஜினி பெயரைச் சொல்லி அமைப்பு நடத்துபவர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏதேனும் ஒரு கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வருவதும் நடக்கிறது. இது பெரிய அளவில் நடந்தால், “ரசிகர்கள் அவர்கள் விருப்பத்துக்கு ஓட்டளிக்கலாம். ஆனால் மன்றத்தின் பெயரையோ எனது பெயரையோ பயன்படுத்தக்கூடாது” என்ற அறிக்கை ரஜினியிடம் இருந்து வரலாம்.
அதே போல ரஜினி ரசிகர்களும் ஓய்ந்துபோய்த்தான் இருக்கிறார்கள். தஞ்சை பகுதியைச் சேர்ந்த ரஜினி மன்ற நிர்வாகி ஒருவரிடம், ரஜினியின் அரசியல் வாய்ஸ் குறித்து பேச ஆரம்பித்ததுமே டென்ஷன் ஆகிவிட்டார். “இப்போ சில வருசமாத்தான் ஒழுங்கா குடும்பத்தைக் கவனிச்சிக்கிட்டிருக்கேன். மறுபடி பேட்டி அது இதுன்னு தெருவுல இழுத்து விட்டுடாதீங்க” என்றார் ஆதங்கத்துடன்.
இந்த ஆதங்கம் பெரும்பாலான ரஜினி ரசிகர்களுக்கு இருக்கிறது. “தலைவர் அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கையில் அவரது படங்களுக்கும், அவரது பிறந்தநாள் அன்றும் கையை மீறி செலவு செய்தவர்கள் பலர். சொத்துக்களை விற்று செலவு செய்தவர்களும் உண்டு. ஆனால் வருவேன், வரமாட்டேன் என்று குழப்பி இன்றுவரை அரசியல் பக்கம் வராமல் இருக்கிறார் ரஜினி. ஆகவே ரஜினி ரசிகர்களுக்கு இப்போது அரசியல் ஆசையும் இல்லை. அவர்களை மதித்து அரசியல் கட்சிகள் முன்புபோல அழைத்து பேசுவதும் இல்லை” என்ற யதார்த்த நிலவரத்தை உடைத்தார் ஒரு மன்ற நிர்வாகி.
ஆகவே ரசிகர் மன்ற அளவில், ஒன்றிணைந்து இந்தத் தேர்தலில் யாருக்கும் ஆதரவளிக்கப்போவதில்லை ரஜினி ரசிகர்கள்.
சரி, ரஜினிக்கு அடுத்தபடியாக ரசிகர்களைக் கொண்டிருக்கும் கமல் ரசிகர்களின் ஆதரவு யாருக்கு?
(அடுத்த பகுதியில்)